Wednesday, February 28, 2024

போராடுவதால் பயன் உண்டா?

போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது.

No comments:

Post a Comment