Monday, October 10, 2016

•தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்!

•தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்!
அநுராதபுர சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணைகளை விரைந்து நடத்தமாறு கோரி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு தலைவர் சம்பந்தர் அய்யா இருக்கிறார். மாகாண முதல்வர் விக்கி அய்யா இருக்கிறார். எப்போதும் போராட்டம் வெடிக்கும் என முழங்கும் மாவை சேனாதிராசா இருக்கிறார்.
இவர்கள் எல்லாரையும்விட எட்டு கோடி ரூபாவிற்கு சொகுசு வாகனம் இறக்கிய சரவணபவன் எம.பி இருக்கிறார். பேரணி செய்தியை இருட்டடிப்ப செய்து சனிபகவானுக்கு மறக்காமல் எள்ளு எரிக்க செய்தி போட்ட அவரது உதயன் பத்திரிகை உள்ளது.
ஆனால் மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா தவிர இவர்கள் யாருமே இந்த உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சென்று பார்வையிடவும் இல்லை. அவர்கள் குறித்து ஆதரவாக ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை.
அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தமது வழக்குகளை தாமதமின்றி விரைந்து விசாரணை செய்யும்படியே கோருகிறார்கள்.
அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை அவர்கள் சிறையில் கழித்துவிட்ட போதும்கூட அவர்களுக்குரிய நீதி வழங்கப்படாமல் தாமதிக்கப்படுகிறது.
குமரபுரம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிங்கள ராணுவத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய அவர்களது வழக்கு விசாரணை அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணையை வடபகுதிக்ககு மாற்றுமாறு கோரியும் இதுவரை மாற்றப்படவில்லை.
சிறப்பு நீதிமன்றம் அமைத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணை விரைந்து நடத்தப்படவில்லை. அவர்களது விருப்பப்படி வழக்கு விசாரணை வடபகுதிக்கு மாற்றப்படவில்லை.
ஆனால் இத்தனையும் செய்யும் அரசு நல்லாட்சி செய்வதாக சம்பந்தர் அய்யா சேட்டிபிக்கேட் கொடுக்கிறார்.
இத்தனையும் செய்யும் அரசின் நல்லிணக்கத்திற்கு எதிராக தமிழர்கள் திரளக்கூடாது என்று சுமந்திரன் அறிக்கை விடுகிறார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா இலங்கை அரசு நல்லெண்ணத்தை கட்டி எழுப்புவதாக பாராட்டுகிறது.
தமிழ் மக்களுக்கு நேர்ந்த இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment