Thursday, October 20, 2016

•சம்பந்தர் அய்யாவும் சுவிஸ் மாதிரியான தீர்வும்!

•சம்பந்தர் அய்யாவும் சுவிஸ் மாதிரியான தீர்வும்!
இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுவிஸ் மாதிரியான சமஸ்டி தீர்வை சம்பந்தர் அய்யா முன்மொழிந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த வருடம் தீர்வு பெற்று தருவதாக கூறிய சம்பந்தர் அய்யா இன்னும் எந்த மாதிரியான தீர்வு என்பதற்கே வரவில்லையா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எதுவாயினும் அவர் கூறியது உண்மையாயின் அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வாகும் அது.
ஆனால் இந்த தீர்வை சம்பந்தர் அய்யாவுக்கு முன்னரே முதன் மதலில் 1911ம் ஆண்டளவில் லெனாட் வூல்வ் என்ற ஆங்கிலேய அதிகாரி கூறியிருக்கிறார்.
லெனாட் வூல்வ் என்ற ஆங்கிலேய சிவில் அதிகாரி அம்பாத்தோட்டையில் 7 ஆண்டுகள் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றியுள்ளார்.
அவர் பின்னர் பிரித்தானியாவின் தொழிற் கட்சியில் சேர்ந்து செயற்பட்டுள்ளார். இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்தவர்களில் இவரும் ஒருவர்.
இலங்கை சுவிஸ் போல் 5 கண்ரோன்களாக பிரிக்கப்பட்டு ஜந்தாவது கன்ரோனாக மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
மலையக தமிழர்களின் நலனை பேணுமாறு அவர்கட்காக தனியொரு கன்ரோனை பரிந்துரைத்த ஒரே ஒருவரும் நாமறிய அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
லெனாட் வூல்வ் நிச்சயமாக தனது காலத்தை தாண்டிச் சிந்தித்துள்ளார். அவர் அன்று சிந்தித்ததை இன்றுதான் சம்பந்தர் அய்யாவால் சிந்திக்க முடிகிறது.
இலங்கையும் சுவிற்சலாந்தும் பரப்பளவு, மக்கள் தொகை, பல இனங்கள் என பெரும்பாலானவற்றில் ஒத்து இருக்கின்றன. எனவே சுவிற்சலாந்தில் நடைமுறையில் உள்ள கன்ரோன் சமஸ்டி முறை இலங்கைக்கு பொருத்தமானதே!
இந்த சுவிஸ் மாதிரியான சமஸ்டி என்பது இலங்கைக்கு பொருத்தமானது மட்டுமல்ல அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

No comments:

Post a Comment