Thursday, February 15, 2024

தமிழ்நாட்டில் தோழர் ஜீவாவை

தமிழ்நாட்டில் தோழர் ஜீவாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ஒருமுறை கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு மிகவும் பசியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மிகவும் களைப்புடன் வருவதைக் கண்ட தொண்டன் ஒருவன் “ஏன் தோழரே சாப்பிடவில்லையா ?” எனக் கேட்டான். அதற்குஜீவா “ கையில காசு இல்லை. அதனால் சாப்பிடவில்லை” என்றார். உடனே அந்த தொண்டன் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தான். ஜீவா சாப்பிட்டுவிட்டு எழும்போது அவர் மடியில் ஒரு துணியில் கட்டப்பட்ட பணம் இருப்பதை கண்டான் அத் தொண்டன். உடனே அத் தொண்டன் “இப் பணத்தில் சாப்பிட்டிருக்கலாமே தோழர்?” எனக் கேட்டான். அதற்கு ஜீவா “ இது மக்கள் தந்த பணம். இதை நான் கட்சியில் ஒப்படைக்கனும். இது கட்சிப் பணம்” என்று கூறினார். இது தமிழ்நாட்டில் நடந்த கதை. இப்போது அப்படியே ஈழத்திற்கு வாருங்கள். உங்களுக்கு ஒரு ஈழத்தில் நடந்த கதை ஒன்று கூறுகின்றேன். ஒரு கரும்புலி போராளி, இரு தினங்களில் தற்கொலை தாக்குதல் செய்ய முடிவாகிறது. இயக்க வழக்கப்படி அப் போராளி இறுதியாக தன் குடும்பத்தை காண செல்கிறான். ஒரு சிறய குடிசையில் தாயும் தங்கையும் இருக்கின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் அவர்கள் இருந்தனர். இருப்பினும் நீண்ட நாட்களின் பின் தன் மகனைக் கண்ட அத் தாய் பக்கத்தில் வீட்டில் கடன் வாங்கி மகனுக்கு உணவு சமைத்து போடுகிறார். உணவு உண்ட மகன் விடைபெறும்போது அவன் சட்டை பாக்கட்டில் பணம் இருப்பதை அத் தாய் காண்கிறார். “மிகவும் கஸ்டமாக இருக்கிறது ஒரு ஐந்நூறு ரூபா தா” என்று தாய் கேட்கிறார். “இது இயக்க பணம் அம்மா. இதை நான் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். நான் தர முடியாது” என்று அந்த மகன் கூறுகின்றார். தான் இரு தினங்களில் இறக்கப் போகின்றேன் என்பது அந்த போராளிக்கு தெரியும். ஆனாலும் அப் போராளி அந்த இறுதி சந்திப்பில் தன் தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவில்லை. இங்கு எனது கவலை என்னவெனில் தோழர் ஜீவாவின் தியாகம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது. ஆனால் எம்மவர்களின் மகத்தான தியாக வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் உள்ளது. இனியாவது கடத்துவோம்

No comments:

Post a Comment