Friday, January 19, 2018

தோழர் சாந்தன் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருக்கும் தோழர் சாந்தன் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தோழர் சாந்தன் கரவெட்டியை பிறப்பிடமாகவும் தற்போது இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
தோழர் சாந்தன் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்தபோது தோழர் தோழர் தமிழரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெண்ணாடம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
தோழர் சாந்தன் பேரவையின் மலையாளப்பட்டி அரசியல் முகாம் பொறுப்பாளராக இருந்தவர். இதனால் தோழர்கள் தமிழரசன், புலவர் கலியபெருமாள், சுந்தரம் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகியவர்.
தோழர் தமிழரசன் குறித்து நான் நூல் எழுதுகிறேன் என்றவுடன் லண்டன் வந்து என்னுடன் உரையாடல் செய்து அது நூலில் இடம்பெற உதவி புரிந்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்தக்களை தெரிவித்துள்ள தோழர் சாந்தனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல் குறித்து தோழர் சாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
மிகவும் உன்னதமான தோழர் தமிழரசனை அடித்துக் கொல்லப்பட்ட ஒரு கொள்ளைக்காரனாக வரலாறு பதிவு செய்துள்ளதே என்ற ஏக்கமும் கவலையும் இத்தனை நாள் எனக்கு இருந்தது.
ஆனால் தோழர் பாலன் எழுதிய இந்நூல் அந்த கவலையை போக்கிவிட்டது. ஆம். தோழர் தமிழரசனின் உண்மையான தியாகத்தை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்துள்ளது.
வெறுமனே தோழர் தமிழரசன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யாமல் அவர் பின்பற்றிய தத்துவங்கள் கூறிய கருத்துகள் இன்றும்கூட சரியாக இருக்கிறது என்பதை மிகவும் தெளிவாக விளக்கியிருப்பது இந் நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும்.
இந்த நூல் தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் தோழர் தமிழரசன் நன்கு அறிமுகப்படுத்துகிறது.
தோழர் தமிழரசன் பற்றி நான் கூறிய கருத்துக்கள் நூலில் இடம்பெற்றிருப்பதால் மீண்டும் அதனை இங்கு குறிப்பிட தேவையில்லை என கருதுகிறேன்.
ஆனால் இங்கு எனக்கு ஒரு சிறு வருத்தம் உள்ளது. அது என்னவெனில் தோழர்கள் புலவர் கலியபெருமாள், சுந்தரம் ஆகியோரைப் பற்றி குறிப்பிட்ட பாலன், தோழர் தர்மலிங்கம் பற்றி இந் நூலில் குறிப்பிடவில்லை.
தோழர் தமிழரசன் வரலாற்றில் புலவர் கலியபெருமாள், மற்றும் சுந்தரம் போன்று தோழர் தர்மலிங்கமும் முக்கியமானவர். தவிர்க்கப்பட முடியாதவர்.
தோழர் தமிழரசன் படுகொலை செய்யப்பட்டபோது தோழர் தர்மலிங்கமும் அவருடன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தோழர் தர்மலிங்கத்தின் உடலை உறவினர்கள் யாரும் பொறுப்பேற்காததால் பொலிசாரே அவர் உடலை எரித்தனர் என்ற புலவரின் வரிகளைப் படித்தபோது மிகவும் கவலை கொண்டேன்.
தோழர் பாலன் எழுதும் அடுத்த நூலில் தோழர் தர்மலிங்கம் குறித்து எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதன்மூலம் அவரின் முக்கியத்துவமும் தியாகமும் மக்கள் அறியச் செய்ய வேண்டும்.
புரட்சியாளர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது. அவை நிச்சயம் சமூக மாற்றத்திற்கு உரமாக அமையும்.
இந்த உன்னதமான தோழர்களுடன் பழகுவதற்கு எனக்கும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியே.
அவர்களுடைய வரலாற்றை சிறப்பாக நூலாக்கி தந்த தோழர் பாலனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment