Wednesday, January 31, 2018

•சுமந்திரனை எதிர்ப்பது கருத்துச் சுதந்திர மறுப்பா?

•சுமந்திரனை எதிர்ப்பது
கருத்துச் சுதந்திர மறுப்பா?
லண்டனில் இளைஞர்களால் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை கருத்துச் சுதந்திரத்திற்கான எதிர்ப்பாக சிலர் சித்தரிக்கின்றனர்.
இன்னும் சிலர், சுமந்திரனை எதிர்ப்பவர்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பார்களா என்று கேட்கிறார்கள்.
வேறு சிலர், கூட்டத்தை ரத்து செய்து தமிழ் இனத்திற்கு ஏற்படவிருந்த அவமானத்தை சுமந்திரன் தவிர்த்துவிட்டார் என்று சுமந்திரன் புகழ் பாடுகின்றனர்.
இந்த கருத்துக் கந்தசாமிகளுக்கு சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.
(1)அண்மையில் இந்தியாவில் குஜராத் தேர்தலின்போது வாக்கு கேட்டுச் சென்ற பாஜக வேட்பாளருக்கு விவசாயிகள் செருப்பு மாலை அணிவித்தார்கள்.
(2)புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது கூட்டமொன்றில் உரையாற்றியவேளை ஊடகவியலாளர் ஒருவர் சப்பாத்தை அவர் மீது எறிந்தார்.
(3)முன்னாள் பாதுகாப்பு செயலர் நாராயணன் சென்னையில் உரையாற்றும்போது பிரபாகரன் என்ற இளைஞன் செருப்பால் அடித்தான்.
இவை உலக அளவில் நடந்த சில சம்பவங்கள். இதே போன்று ஈழ வரலாற்றிலும் அரம்ப காலங்களில் நடந்துள்ளன.
•மாவட்டசபை தீர்வை ஆதரித்து கிராம யாத்திரை சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இளைஞர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.
•கரவெட்டிக்கு வந்த அமிர்தலிங்கம் ஜீப்பிற்கு குஞ்சர்கடையடியில் கல்வீச்சு நடத்தப்பட்டது.
•அரசடியில் நடந்த கூட்டத்தில் சிவசிதம்பரம் முன்னிலையில் வண்ணணை ஆனந்தனுக்கு அடி போடப்பட்டது.
•வல்வெட்டித்துறையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஜீப் வண்டி கொளுத்தப்பட்டது.
•யாழ் முற்றவெளியில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரமுகர்களுக்கு இளைஞர்களால் உணவு பலவந்தமாக தீத்தப்பட்டது.
இப்படி பல உதாரணங்களை கூறமுடியும். அப்போது யாரும் இதனை கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பாக குறிப்பிடவில்லை.
அதுமட்டுமல்ல அப்போது இதனை ஆதரித்த இந்த கருத்துக் கந்தசாமிகளே இப்போது சுமந்திரனுக்கு நிகழும்போது கருத்துக்(நீலி) கண்ணீர் வடிக்கின்றனர்.
நாம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் நேரடியாகவே கூறவிரும்புகிறோம்.
எதிரிக்கும் துரோகிக்கும் ஜனநாயகத்தை வழங்குவது என்பது நாம் தொடர்ந்து அடிமையாக இருக்கும்படி கோருவது ஆகும்.
வன்முறை மூலம் புரட்சியை மேற்கொள்வதோடு கைப்பற்றும் ஆட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற காரல் மாக்சின் கூற்றை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எதிரிகளையும் துரோகிகளையும் எமக்கு தெரிந்த வழிகளில், எமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எமக்கு வெற்றி கிடைக்கும்வரை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருப்போம்.

No comments:

Post a Comment