Monday, April 23, 2018

இந்தி நடிகருக்கு ஒரு நியாயம்

இந்தி நடிகருக்கு ஒரு நியாயம்
தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதானா இந்திய நீதிமன்ற நியாயம்?
சஞ்சய்தத் என்று ஒரு இந்தி நடிகர் இருந்தார். அவர் ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்ததாக அவருக்கு 5 வருட தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் அவர் ஒருவருடம்கூட தண்டனை அனுபவிக்காத நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை பற்றரி வாங்கிக்கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 25 வருடமாகியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
மானைக் கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 6 வருடம் தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் அவருக்கு இரண்டு நாளில் ஜாமீன் வழங்கப்பட்டது. வெறும் இரண்டு நாட்களை மட்டுமே அவர் சிறையில் கழித்துள்ளார்.
அதேவேளை மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் நான்கு வருடங்களுக்கு மேலாகியும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
கடந்த 10.03.2014 யன்று திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு வருடங்களாகியும் இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்து வருகின்றது தமிழக கியூ பிராஞ் பொலிஸ்.
இந்நிலையில் தமிழரசன் என்பவருக்கு 4 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
பொதுவாக ஒரு வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அதனைக்காட்டி மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்குவது மரபாக இருக்கிறது.
ஆனால் இவர்களுக்கு அவ்வாறு ஜாமீன் வழங்க மறுத்து வருவதுடன் வழக்கு விசாரணையையும் முடிக்காமல் தாமதப்படுத்தப்படுகிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். நான்கு வருடங்களாக இவர்களுக்குரிய நீதியும் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இந்தி நடிகர்களுக்கு ஒரு நியாயமும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
இதுதான் இந்திய நீதியா?

No comments:

Post a Comment