Friday, August 30, 2019

வந்தார்கள் கொன்றார்கள் ஏறி குந்தியும் விட்டார்கள் நிரந்தரமாக!

வந்தார்கள்
கொன்றார்கள்
ஏறி குந்தியும் விட்டார்கள் நிரந்தரமாக!
அவர்கள் வந்தார்கள். 
முதலில் வானில் இருந்து உணவுப் பொட்டலம் போட்டார்கள்
பின்னர் துப்பாக்கி டாங்கிகளுடன் வந்தார்கள்
எமது மீட்பர்கள் வருகிறார்கள் என்று நம்பினோம்.
திடீரென மருத்துவ மனையில் சுட்டார்கள்
பத்திரிகை அலுவலத்தில் சுட்டார்கள்
ஊரையே சுற்றி வழைத்து சுட்டார்கள்
ஏன் என்று கேட்டதற்கு
“ நாங்கள் அமைதிப்படை. அமைதியை நிலை நாட்டுகிறோம்” என்றார்கள்.
அவர்களது அமைதி நிலைநாட்டலில் நாம்
12000 தமிழர்களின் உயிர்களை இழந்தோம்
800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோம்
பல கோடி ரூபா பெறுமதியான உடமைகளை இழந்தோம்.
நல்லவேளை இரண்டு வருடத்தில் திரும்பிச் சென்றார்கள்
இல்லையேல் என்ன நடந்திருக்கும் என்று
நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆனால் மீண்டும் வந்தார்கள்
இம் முறை “பயங்கரவாத ஒழிப்பு” என்று கூறிக்கொண்டு
மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து வந்தார்கள்
புலிகளைத்தானே அழிக்கிறார்கள் என்று நாங்களும் சும்மா இருந்தோம்
ஆனால் அவர்கள் புலிகளை அழித்தது
தமது ஆக்கிரமிப்புக்காகவே என்பதை இப்போதுதான் உணர்கிறோம்
இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்று
ராஜபக்சாக்கள் கூறியதன் அர்த்தத்தையும்
இப்போதுதான் நாம் உணர்கிறோம்
ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவர்கள்
துப்பாக்கிகளுடன் கிருத்தவ மதத்தையும் கொண்டு சென்றார்கள்
அதனால்தான் ஒரு கவிஞன் எழுதினான்
“அவர்கள் வருமுன்னர் நாடு எமது கையில் இருந்தது
பைபிள் அவர்கள் கையில் இருந்தது.
இப்போது பைபிள் எமது கையில் இருக்கிறது
அவர்கள் கையில் எமது நாடு இருக்கிறது”
இதே கதைதான் எமது நாட்டிலும் நடந்துள்ளது.
ஆனால் இதை எழுத எமக்கு ஒரு கவிஞன் இல்லை
அவர்கள் இம்முறை இந்து மதத்தை கொண்டு வந்துள்ளார்கள்
அதனால் இப்போது நாம் கிளிநொச்சியில்
சர்வதேச இந்து மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்
ஆனால் அவர்கள் கையில்
காங்கேசன்துறை துறைமுகம் போய்விட்டது
கூடவே அதன் சீமெந்து ஆவையும் போய்விட்டது
பலாலி விமான நிலையம் போய்விட்டது
திருகோணமலை துறைமுகம் போய்விட்டது
சம்பூர் 500 எக்கர் நிலமும் போய்விட்டது
கூடவே அனல்மின் நிலையமும் போய்விட்டது
புல்மோட்டை கனிவளமும் போய்விட்டது
மன்னாரில் எண்ணெய் வளமும் போய்விட்டது.
இதென்ன நியாயம் என்று கேட்டால்
கவலைப்படாதிர்கள் வடக்கு கிழக்கு முழுவதும்
20 காந்திசிலைகளை நிறுவித் தருகிறேன் என்று
யாழ் இந்திய தூதர் சிரித்தக் கொண்டே கூறுகிறார்.
ஆனாலும் இந்திய தூதர் கொஞ்சம் நல்லவர்தான்
ஏனெனில்,
20 ராஜீவ் காந்தி சிலைகளை நிறுவப் போகிறேன்
என்று கூறியிருந்தால் என்னாவது?
ஆனாலும் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை
ஏனெனில்
ராஜீவ் காந்தி இருந்திருந்தால்
ஈழம் பெற்று தந்திருப்பார் என்று
எழுதுவதற்கு நம் மத்தியில் நாலு பேர்
அப்போதும் இருப்பார்கள்தானே?

No comments:

Post a Comment