Friday, August 30, 2019

•தமிழின விடுதலைக்கான பாதை எது?

•தமிழின விடுதலைக்கான பாதை எது?
மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது என்று நேற்று ஒரு பதிவில் கூறியிருந்தேன்.
எனவே மகிந்தவின் ஆதரவாளர்கள் இதனை எதிர்த்து கருத்து பகிர்வார்கள் என்றே நான் நினைத்திருந்தேன்.
அவர்கள் “ Not very bad “ என்று கூறிவிட்டு கடந்து சென்று விட்டார்கள். ஆனால் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் விசுவாசிகள் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
எனக்கு இவர்கள் இவ்வாறு விமர்சனம்; முன்வைத்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் இதே கருத்தை சம்பந்தர் ஜயா அண்மையில் கூறியபோது மௌனமாக இருந்துவிட்டு நான் கூறும்போது மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதே ஆச்சரியமமாக இருக்கிறது.
சரி. பரவாயில்லை. விடயத்திற்கு வருவோம். இப்போது எம்முன் உள்ள கேள்வி தமிழின விடுதலைக்கான பாதை எது என்பதே.
இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும்.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள்.
இதில் எந்தப் பாதையை தெரிவு செய்தால் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என்பதே இன்று எம் முன் உள்ள கேள்வியாகும்.
தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்து நாம் தெளிவாக கண்டறிய வேண்டும்.
மாவோ அவர்கள் ஒருமுறை சுட்டிக்காட்டியதுபோல் நாம் ஆற்றைக் கடக்க முடிவு செய்தால் அதற்கு ஒரு பாலத்தைக் கட்ட வேண்டும். அல்லது ஒரு வள்ளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதே போலவே தமிழின விடுதலை என்ற இலக்கை அடைய வேண்டுமாயின் அதற்கு ஒரு பாதையை நாம் தெரிவு செய்ய வேண்டும்.
தேர்தல் பாதையை முன்னெடுத்த தமிழரசுக் கட்சியினர் 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது.
அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை.
இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள்.
இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.
ஆனால் இப்போது மீண்டும் அதே தமிழரசுக்கட்சியினர் தேர்தல் பாதையை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்கள் தீர்வு பெற முடியும் என்று கூறி வருகின்றனர்.
ஆனால் மார்க்சிய ஆசான்கள் இதனை மறுக்கின்றனர். அவர்கள் ஆயுதப் போராட்டதின் மூலமே எந்த இனமும் விடுதலை பெற முடியும் என்கின்றனர்.
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கியெறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி என்றார் மாபெரும் ஆசான் காரல் மார்க்ஸ். தேர்தல் பாதை மூலம் புரட்சி செய்ய முடியும் என அவர் ஒருபோதும் கூறவில்லை.
"வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை" என்று மாபெரும் ஆசான் லெனின் கூறியுள்ளார்.
"ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்திருக்காவிடின் சீனப்புரட்சி வெற்றிவாகை சூடியிருக்கமுடியாது" என்று மாபெரும் ஆசான் மாவோ கூறியிருக்கிறார். "மக்கள்படை ஒன்று இல்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றுமே இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
“பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி முதலாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது என்பதே நமது சுலோகமாகும்" என்ற தோழர் லெனின் அவர்களின் வரிகளை சுட்டிக்காட்டிய தோழர் மாவோ அவர்கள் “ஆயுத பலாத்காரத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, யுத்தத்தால் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, புரட்சியின் கேந்திரக் கடமையும் அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும். புரட்சி பற்றிய இந்த கோட்பாடு சீனாவுக்கு மாத்திரமல்ல இதர நாடுகளுக்கும் சர்வ வியாபகமாகப் பொருந்திய ஒரு கோட்பாடு” என்று கூறியுள்ளார்.
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் சண்முகதாசன் அவர்கள் " 44 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பாவிக்கப்பட்டும் ஒருவித பலனையும் தராத பாராளுமன்ற ஜனநாயகப்பாதையை நிராகரிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கருத்தை இன்னும் தெளிவாக தோழர் சண்முகதாசன் கூறுகிறார் “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
இந்தளவு தெளிவாகவும் உறுதியாகவும் மார்க்சிய ஆசான்கள் கூறிய பின்பும் தமிழரசுக்கட்சியினர் எதற்காக தேர்தல் பாதையை தொடர்ந்து முன்வைக்கின்றனர்?
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட இயந்திரமே அரசு எனப்படும். அரசின்; காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.
மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர்.
இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
பாராளுமன்ற வழி மூலம் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வையும் போராட்ட மனப்பான்மையையும் மழுங்கச் செய்யப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்
இதுவே இலங்கையில் தமிழரசுக்கட்சியினர் தேர்தல் பாதையை முன்வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்குரிய காரணமாகும்.

No comments:

Post a Comment