Friday, August 30, 2019

அவதூறுகள் மூலம் தோழர் தமிழரசனை அகற்றிவிட முடியுமா?

•அவதூறுகள் மூலம் தோழர் தமிழரசனை
அகற்றிவிட முடியுமா?
பொதுவாக தினமும் எனக்கு முகநூலில் நட்பு அழைப்புகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் அண்மையில் சில நாட்களாக அதிக நட்பு அழைப்புகள் வருகின்றன.
என்ன காரணமாக இருக்கும் என பார்த்தால் கனடாவில் ஒரு (சுப்பிரமணிய) சுவாமி எனக்கு ஓசி விளம்பரம் தந்திருக்கிறார் என்று தெரிய வந்தது.
அவர் அதில் என்னை விமர்சிப்பதாக நினைத்து தோழர் தமிழரசன் மீது அவதூறு பொழிந்திருக்கிறார்.
அவர் என்னை அவதூறு செய்திருந்தால் நான் மௌனமாக கடந்து சென்றிருப்பேன். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கிய தோழர் தமிழரசன் மீது அவதூறு பொழிந்துள்ளதால் ஒரு ஈழத் தமிழனாக அதற்கு பதில் அளிக்க வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.
கனடாவில் எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூல் வெளியீட்டில் இவரும் பங்குபற்றி உரையாற்றியிருந்தார். அப்போது இவர் இந்த கருத்துகள் எதையும் கூறவில்லை.
அதன்பின்பும் பல தடவை என்னுடைய முகநூலில் தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அப்போதும் இவை எதையும் அவர் கூறவில்லை.
தோழர் தமிழரசனை “கொலைகாரன்” “கொள்ளைக்காரன்” என்று கூறுகிறார். இது ஒன்றும் புதிய குற்றச்சாட்டுகள் இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊளவுப்படையினரால் கூறப்பட்டவைதான்.
இதற்கு பலமுறை பலர் பதில் அளித்து விட்டார்கள். நான் கூட எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலில் விரிவாக பதில் அளித்துள்ளேன்.
இவர் ஈழப் போராளிகளையும் “கொலைகாரா”; “கொள்ளைக்காரர்” என்றே எழுதி வருகிறார். எனவே தோழர் தமிழரசனையும் அவ்வாறு எழுதியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் தோழர் தமிழரசனுக்கு வெடி மருந்து கொடுத்தவர் ஒரு ஈபிஆர்எல்எவ் போராளி என்றும் அவர் இப்போது கனடாவில் இருப்பதாகவும் எழுதியுள்ளார்.
இது பச்சைப் பொய். உண்மையில் தமிழரசன் காலத்திலும் சரி அதன் பின்னரும் தமிழ்நாடு விடுதலைப்படை மேற்கொண்ட அனைத்து தாக்குதலிலும் பயன்படுத்திய வெடி மருந்து ஈழப் போராளிகள் யாருமே வழங்கவில்லை.
அடுத்து பழுதான சப் மிசின்கன் துப்பாக்கி காரணமாகவே தோழர் தமிழரசன் இறந்தார் என்று இன்னொரு பொய்யை கூறியுள்ளார்.
உண்மையில் சப் மிசின்கன் மட்டுமல்ல பல ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தது. தோழர் தமிழரசன் சுட விரும்பவில்லை. அவர் தன் தோழர்கள் சுட முயன்றபோதும் சுடவேண்டாம் என்று தடுத்தவர்.
அதுமட்டுமல்ல அவர்களிடம் ஒறிஜினல் கிரினைட்டுகளும் இருந்தன. அவர்கள் விரும்பியிருந்தால் அவ் வெடிகுண்டுகளை பாவித்துகூட தப்பி போயிருக்கலாம்.
அவர் மக்களை நோக்கி சுட விரும்பவில்லை. தாங்கள் செத்தாலும் பரவாயில்லை என்றே கருதினார். இந்த உண்மை வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் துப்பாக்கி பழுதடைந்ததால் இறந்தார் என்று கதையை அவிட்டு விடுகிறார் இந்த சுவாமி.
கியூ பிராஞ் பொலிசில் பணிபுரியும் தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் இவ் அவதூறுகளை இந்த சுவாமி மேற்கொள்கிறார்.
ஆனால் எத்தனை சுவாமிகள் எந்தளவு அவதூறுகள் பொழிந்தாலும் இனி தோழர் தமிழரசனை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அகற்றிவிட முடியாது.

No comments:

Post a Comment