Friday, August 30, 2019

கம்போடியா முருங்கக்காய்!

•கம்போடியா முருங்கக்காய்!
மோடியின் முதலைக் குட்டி கதைக்கு பதிலாக நான் முருங்கக்காய் கதை எழுதியிருந்தேன்
மோடியின் முதலைக்கதை உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் நான் எழுதியது உண்மைக் கதையே.
இன்றைக்கு இன்னொரு முருங்கக்காய் கதை உங்களுக்கு கூறப் போகிறேன்.
இந்தியாவில் எட்டு வருட சிறை வாசத்தின் பின் நான் வெளியேற்றப்பட்டபோது தவிர்க்க முடியாமல் கம்போடியா நாட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.
உண்மையைக் கூறினால் எனக்கு கம்போடியா பற்றி எதுவுமே அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஈழத் தமிழர்கள் தங்குவதற்கு தேவையான விசாவை அந்நாடு தருகிறது. எனவே அங்கு செல்லுங்கள் என நண்பர்கள் கூறியதால் அங்கு சென்றேன்.
ஆச்சரியம் என்னவெனில் அந் நாட்டு தலைநகரமாகிய நொம்பென் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது எமது பலாலி விமான நிலையம் போன்று பனைகள் தென்பட்டன.
அதைவிட ஆச்சரியம் விமான நிலைய வாசலிலேயே சயிக்கிளில் கொண்டு வந்து பனங்கள்ளு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
கம்போடிய மொழி தெரியாவிடினும் எமது ஈழத் தமிழ் இளைஞர்கள் சிலர் கடன் பேசி அந்த கள்ளு வாங்கி குடித்த கதையைக் கேட்டதும் நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.
மன்னிக்கவும். முருங்கக்காய் கதை என்று கூறிவிட்டு கள்ளு கதையை கூறிவிட்டேன். இப்போது அதற்கு வருகிறேன்.
கம்போடியாவில் நிறைய இடங்களில் முருங்கை மரம் இருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் அத்தனை மரங்களிலும் நிறைய காய்கள் இருந்தன.
இதனைக் கண்ட நான்; சந்தோசத்தில் நிறைய காய்களை பிடுங்கி கறி சமைப்பதற்காக எனது இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றேன்;.
நான் முருங்கக்காயுடன் வருவதைக் கண்ட வீட்டு ஓனரின் மனைவி ஏன் என்று கேட்டார்.
நான் சந்தோசத்துடன் கறி சமைத்து சாப்பிடப் போகிறேன் என்றேன். இதைக் கேட்டதும் அந்தப் பெண் கம்போடிய மொழியில் ஏதேதோ சொல்லி திட்டினார்.
திட்டிவிட்டு எனது கைகளில் இருந்த காய்களை பறித்து சென்று வீதியில் எறிந்து விட்டார்.
எனக்கு அவர் திட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது. ஆனால் ஏன் திட்டுகிறார் என்று மட்டும் புரியவில்லை.
சிறிது நேரத்தின் பின் அவரது மகன் வந்தார். அவருக்கு ஒரளவு ஆங்கிலம் தெரியும். அவர் கூறியதில் இருந்து நான் புரிந்து கொண்டது “ கம்போடியாவில் முருங்கை மரத்தில் பேய் இருக்கிறது. எனவே முருங்கக்காய் பேய்க்காய் என்பதால் அது உண்ணக்கூடாது”.
இது பேய்க்காய் இல்லை. எங்கள் நாட்டில் இதை சாப்பிடுவார்கள் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனால் கம்பொடியாவில் இருக்கும்வரை என்னால் அதை சாப்பிடவும் முடியவில்லை.
அது சரி இப்ப இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கலாம். இன்று புகைப்பட தினமாம். எனவே கம்போடியாவில் நண்பருடன் இருந்த படத்தை கீழே தருகிறேன். அதற்கான கதையே இது.
கம்போடியாவில் பிரபல்யமான அங்கவாட் கோயில்கள் உள்ளதே. அதைப் பற்றி எழுதாமல் முருங்கக்காய் பற்றி எழுதுகிறாயே என சிலர் நினைக்கலாம். உண்மைதான் . அடுத்து விரைவில் அது பற்றி படங்களுடன் எழுதுகிறேன்.
இறுதியாக நண்பர் பற்றி சில வரிகள். இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இரத்தி அல்லது சபா என்று அழைக்கப்படுபவர். பிரபாகரனின் நெருங்கிய உறவினர் என்பதால் 5 வருடம் இந்திய சிறை மற்றும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்.

No comments:

Post a Comment