Saturday, July 15, 2023

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது. காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்க அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது” என்றது பசு. “நீ பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய்?” என்று யானை ஆச்சரியத்துடன் கேட்டது. “நான் பசு என்கிறது எனக்கு தெரியும். ஆனால் என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை பசுன்னு நிரூபிக்க முடியாமல் காலம்பூராவும் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது பசு. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. மேலே கூறியது காட்டில் நடந்த கதை. இனி நாட்டில் நடக்கும் ஒரு கதையை பார்ப்போம். அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த அகதி இளைஞன் ஒருவனைத் தடுத்த தாத்தா ஒருவர் “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டார். “புலி பிடிக்க கியூ பிராஞ் பொலிஸ் வருகிறது. அதுதான் பயத்தில் ஓடுகிறேன்” என்றான் அந்த அகதி இளைஞன். “நீ அகதிதானே. நீ எதற்கு ஓடுகிறாய்?”என்று ஆச்சரியத்துடன் அந்த பெரியவர் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் “ நான் அகதிதான். புலி இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் என்னை புலி என்று கியூ பிராஞ் சிறப்புமுகாமில் அடைத்தால் அப்புறம் நான் வெளியில் வரமுடியாதே” என்றான். இப்போது அந்த பெரியவரும் இளைஞனுடன் சேர்ந்து ஓடினார். குறிப்பு – சிறையில் கூட இத்தனை வருடம் தண்டனை என்று குறிப்பிட்டு அடைப்பதால் எப்போது விடுதலை என்பது தெரியும். ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டால் எப்போது விடுதலை என்பதும் தெரியாது. சிறையைவிடக் கொடியது சிறப்புமுகாம்.

No comments:

Post a Comment