Thursday, February 15, 2024

இலங்கையில் இன்று ஒரு பெட்டி சிகரெட்டின்

இலங்கையில் இன்று ஒரு பெட்டி சிகரெட்டின் விலை 1800 ரூபா என்கிறார்கள். ஆனால் இந்த சிகரெட் ஆங்கிலேயர்களால் முதலில் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதை அறிவீர்களா? மக்கள் இதனை பழக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சந்தியிலும் இலவசமாக கொட்டி வைத்தார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதனைப்பழகி இதற்கு அடிமையானதும் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். இன்று எந்த அரசும் ஒவ்வொரு வருடமும் விலை அதிகரிப்பு செய்யும் பொருள் சிகரெட்தான். விலை அதிகரிக்கிறதே என்று சிகரெட்டிற்கு அடிமையானவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று அரசுக்கு நன்கு தெரியும். இதைப் படித்தவுடன் இந்தியாவில் இருந்து இலவசமாக இறக்குமதியாகும் நடிகர் நடிகையர் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. சரி , நான் கூற வந்த விடயம் என்னவெனில் ஹரிகரன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பலரும் பலவித கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்வில் குழப்பம் ஏற்படுவது இது முதல் முறை இல்லை. 1981ல் பாடகர் மலேசியா வாசுதேவன் யாழ் வந்திருந்தார். அவருடைய ஒரு இசை நிகழ்ச்சி கரவெட்டி நெல்லியடி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர் போதிய பணம் சேராததால் கூறியபடி மீதி பணத்தை மலேசியா வாசுதேவனிடம் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் நிகழ்சியை பாதியில் இடை நிறுத்தினார் மலேசியா வாசுதேவன். ஆனால் பணம் கொடுத்து நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து பாட வேண்டும் என்று வற்புறுத்தியதுடன் மேடையை நோக்கி கல் எறிந்தனர். இதில் ஒரு கல் மலேசியா வாசுதேவன் மீது விழுந்தது. அவர் மிகுந்த கவலையுடன் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார்” என்ற பாடலை பாடினார். அதுமட்டுமல்ல தன் வாழ்நாளில் கரவெட்டியை மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அடுத்து இன்னொரு நிகழ்வு. வல்வெட்டித்துறை கோவில் திருவிழாவில் எல்ஆர்ஈஸ்வரியின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டம். வல்வெட்டித்துறை இளைஞர்களே கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஈஸ்வரி பாடினார். அப் பாடலில் சிங்கள என்று ஒரு வரி வரும். அதனை அவர் பாடும்போது பெருங் கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு மேடையை நோக்கியை ஓடியது. ஒருகணம் திகைத்து பாடுவதை நிறுத்திய ஈஸ்வரி அவர்கள் காரணத்தை புரிந்துகொண்டு இலங்கை என்று மாற்றி பாடினார். உடனே பலத்த கைதட்டல் அவருக்கு கிடைத்தது. அதே காலகட்டத்தில் சுட்டிபுரம் கோவிலில் சீர்காழி கோவிந்தராசன் கச்சேரி இடம்பெற்றது. சிறீமாவோ ஆட்சியில் இந்திய கலைஞர் இலங்கை வர தடை இருந்தது. பின்னர் ஜே.ஆர் காலத்தில் தான் அனுமதி கிடைத்தது. அதன்படி யாழ்ப்பாணம் வந்த முதல் பாடகர் சீர்காழி கோவிந்தராசனே எனவே அவரைப் பார்க்க பெருந்திரளான கூட்டம் கூடியது. ஆனால் எந்த குழப்பமும் இன்றி அவர் கச்சேரி நடைபெற்றது. அதுவும் இறுதியில் மழைக்காக ஒரு பாடல் பாடினார். அப் பாடல் பாடி முடித்ததும் அதிசயமாக மழைத் தூறல் நிகழந்தது.

No comments:

Post a Comment