Monday, August 14, 2017

•ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டிய புத்தூர் மக்களின் 30 வது நாளாக தொடரும் போராட்டம்!

•ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டிய
புத்தூர் மக்களின் 30 வது நாளாக தொடரும் போராட்டம்!
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி புத்தூர் கிராம மக்கள் கடந்த 30 நாட்களாக போராடி வருகிறார்கள்.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூர் கிராம மக்கள் இச் சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு தீர்வை வழங்கக்கூடிய நிலையில் இருக்கும் வடமாகாண சபையோ இது குறித்து அக்கறை இன்றி இருக்கிறது.
இந்த மக்கள் 30 நாட்களாக போராடியும் இதுவரை மாகாண முதலமைச்சர் இந்த மக்களை சந்திக்கவும் இல்லை. அவர்களின் குறைகளை கேட்கவும் இல்லை.
டென்மார்க்கில் இருந்து வந்து இறுவட்டு வெளியிடும் பெண்ணின் விழாவில் பங்குபற்ற நேரம் ஒதுக்கும் முதலமைச்சரால் 30 நாட்களாக போராடும் மக்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.
மாதம் ஒன்றிற்கு 3 லட்சம் ரூபா வாடகை உள்ள வீட்டில் தங்கியிருக்கும் முதலமைச்சருக்கு இந்த ஏழை மக்களின் குடியிருப்பு பிரச்சனை புரிந்து கொள்ள முடியாதுதான்.
ஆனால் மற்ற மாகாணசபை உறுப்பினர்களாலும் ஏன் இந்த மக்களின் பிரச்சனை முதலமைச்சரின் கவனத்திற்கு இதுவரை கொண்டு செல்லப்படவில்லை?
சிங்கள ஆளுநர் இந்த போராடும் மக்களை அழைத்து சந்தித்துள்ளார். அவர் இந்த விடயத்தை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஒரு சிங்கள ஆளுநருக்கு இருக்கும் அக்கறைகூட எங்கள் வடமாகாணசபை முதலமைச்சருக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ இல்லாமற் போனது வேதனையாக இருக்கிறது.
இந்த மக்கள் தமக்கு வீடு கேட்க வில்லை. இந்த மக்கள் தமக்கு வேலை கேட்க வில்லை. இவர்கள் கேட்பது எல்லாம் தமது குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானத்தை அகற்றுமாறு என்பது மட்டுமே.
இது நியாயமான கோரிக்கை. இது மாகாண சபையால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கை. ஆனால் மாகாணசபை அக்கறையற்று இருக்கிறது.
கோரிக்கையை தற்போது நிறைவேற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை. அந்த மக்களை சந்தித்து அவர்கள் குறைகளைக்கூட கேட்கக்கூட யாரும் முன்வரவில்லை.
30 நாட்களாக போராடும் தமிழ் மக்களை சந்திக்க ஒரு தமிழ் முதலமைசருக்கு அக்கறை இல்லை எனில் அப்புறம் முதலமைச்சர் எதற்கு? மாகாணசபை எதற்கு?
கேப்பாப்புலவு மக்கள் 160 நாட்களாக போராடுகிறார்கள். இரணைதீவு மக்கள் 100 நாட்களாக போராடுகிறார்கள். சிங்கள அரசு கண்டு கொள்ளவில்லை என்று இனி எந்த முகத்துடன் நாம் கூறமுடியும்?
30 நாட்களாக போராடும் தமிழ் மக்களை அவர்களுடைய தமிழ் முதலமைச்சரே கண்டு கொள்ளவில்லை என்று அறியும்போது சிங்கள அரசு இனி எப்படி கண்டு கொள்ளும்?
போராடும் புத்தூர் கிராம மக்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதனால்தான் உயர்சாதி தலைமைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்போது யார் சாதி பார்க்கிறார்கள?; என்று சொல்லிக்கொண்டு மறுபுறத்தில் சாதி ரீதியாக மக்கள் போராட்டங்களை அணுகுவது இக் குற்றச்சாட்டு உண்மைதான் என காட்டுகிறது.
எனவே புத்தூரில் மக்களின் போராட்டம் தொடரும் ஒவ்வொரு நாளும் தமிழன் வெட்கி தலைகுனிய வேண்டும்.

No comments:

Post a Comment