Tuesday, July 30, 2019

தோழர் சண் அவர்களின் நினைவுகளை போற்றுவோம்!

•தோழர் சண் அவர்களின் நினைவுகளை போற்றுவோம்!
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 99 பிறந்த தினம் ஆகும் (03.07.1920)
தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் ஆவார்.
அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர்.
மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர்.
அவர் ஆயுதப் போராட்டத்தை நடத்தவில்லை என்றாலும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே.
அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
1988ல் கொழும்பில் இருந்துகொண்டு ஜேவிபி யை பகிரங்கமாக விமர்சித்த ஒரே தலைவர் இவர்தான்.
சில சிங்கள தலைவர்கள் ஜே.வி பி க்கு பயந்து இவரது வீட்டில் அடைக்கலம் பெற்றிருந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
அதுமட்டுமல்ல அவர்தான் முதன் முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்களை “போராளிகள்” என்று அழைத்தார்.
அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், எனஎம் பெரோரா, கொல்வின்ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் அழைத்தார்.
அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார்கள்.
அவர் ஓயாது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் அவர் உடல்நிலை மோசமடைந்தது. கடும் சுகயீனங்களால் அவதிப்பட்டார்.
அவர் தனியாக இருந்தார். அவரை அருகில் இருந்து பராமரிக்கக்கூட யாரும் இருக்கவில்லை.
தான் இறந்தால் அச் செய்தியை இந்த நம்பருக்கு தெரிவிக்கவும் என தனது கட்டில் தலைமாட்டில் மகளின் நம்பரை அவர் எழுதி ஒட்டியிருந்தார்.
இங்கிலாந்தில் இருந்து சென்ற மகள் தந்தையின் இந்த அவல நிலையைப் பார்த்தவிட்டு அவரை வற்புறுத்தி தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.
இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது.
அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று புரட்சியை மேற்கொள்வதே ஆகும்.
குறிப்பு- தோழர் சண் அவர்கள் நிறைய எழுதியுள்ளார். அவற்றை சேகரித்து தொகுப்புகளாக வெளியிட வேண்டும். எதிர்கால சந்ததியினர் படிப்பதற்கும் பயணிப்பதற்கும் அவை நன்கு பயன்படும். வழி காட்டும்.

No comments:

Post a Comment