Tuesday, July 30, 2019

உம்மைக்; காணா எந்த நாளும்

உம்மைக்; காணா எந்த நாளும்
இந்த பேதை செத்து தொலைகிறேனே
காதிலே தோடும் இல்லை
கையிலே காப்பும் இல்லே
காலிலே கொலுசுகூட இல்லே
கழுத்திலே சங்கிலியும் இல்லே
அத்தனையும் விற்று தேடியும்
இன்னும் நீவிர் வந்து சேரலையே
நீவிர் வருவீர் என்று தெரிந்தால்
உமக்காக கழுத்தில் இருக்கும் தாலியையும்
விற்கத் தயங்க மாட்டேனே
எனக்கு பொன்னும் வேணாம்
பொருளும் வேணாம்
பணமும் வேணாம்.
நீர் வந்து சேர்ந்தால் போதும்
வந்தால் அண்ணையுடன் வருவேன்
என்று சொல்லி சென்ற என்னவரே
அண்;ணையும் வரலே நீரும் திரும்பி வரலே
என்வென்று நான் உணர்வது என் துணைவரே
இறந்து விட்டீர் என்று தெரிந்தால்
புதைகுழியில் பூ போட்டு அழுது ஆறுதல் பெறுவேனே
இருக்கிறீர் என்று தெரிந்தால் உறுதியுடன் உயிரை
பிடித்து வைத்து உமக்காக காத்திருப்பேனே –ஆனால்
கழுத்தில் தாலி இருந்தும நெற்றியில் பொட்டு இருந்தும்
விதைவையாக நான் வாழ்வதை நீர் அறிய மாட்டீரோ?
செத்து தொலையலாம் என்றால்
சேலைத் தலைப்பில் மகன் தொங்கிக் கொண்டு நிற்கிறான்
அப்பா எங்கே என்று தினமும் கேட்டு அழுகிறான்
அப்பா சாமி கிட்டே போயிட்டார் என்றும்
என்னால் அவனிடம் சொல்ல முடியவில்லை
அப்பா எப்படி இருப்பார் என்று கேட்கிறான்
காட்டுவதற்கு ஒரு போட்டோ கூட என்னிடம் இல்லை
அப்பா சாமிமாதிரி இருப்பார் என்றால்
பிள்ளையார் சாமிமாதிரியா முருகன் சாமிமாதிரியா என்று கேட்டுவிட்டு
உம்மைப்போலவே கைதட்டி சிரிக்கிறான் சொக்கில் குழிவிழ.
எனக்கு ஒரு ஆசை இருக்கிறது
உமது தோளில் சுமந்த துப்பாக்கி
எமது மகன் தோளில் தொங்க வேண்டும்.
அவன் உமது கனவை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment