Tuesday, July 30, 2019

•இலங்கை அரசே! தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

•இலங்கை அரசே!
தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!
நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும, சமூக விடுதலையில் அக்கறை கொண்டவருமான தோழர் தேவதாசன் அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேவதாசன் 2008ல் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் 2017ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கியது. இத் தீர்ப்புக்கு எதிராக தோழர் தேவதாசன் அப்பீல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் தனக்கு மேன்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு கோரி இன்று முதல் (15.07.2019) அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
விடுதலை செய்யுமாறு அல்ல அப்பீல் செய்யவே உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதான் இலங்கை அரசின் புனர்வாழ்வுக் கொள்கையாக இருக்கிறது. இந்த அரசைத்தான் சம்பந்தரும் சுமந்திரனும் கவிழாமல் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
தோழர் தேவதாசன் கரவெட்டியைச் சேர்ந்தவர். கரவெட்டியில் என் போன்ற பல இளைஞர்கள் போராட்டத்திற்கு வருவதற்கு உந்துதலாக இருந்தவர்.
கரவெட்டியில் முதன் முதலாக இவரைக் கைது செய்வதற்கே ராணுவம் வந்தது. இவரை ராணுவம் கைது செய்தது ஈழநாடு பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வந்தது.
வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரேமதாசா கரவெட்டிக்கு வந்தபோது இளைஞர்களை திரட்டி கடும் எதிர்ப்பை பதிவு செய்தவர் தோழர் தேவதாசனே.
அப்போது பிரேமதாசா கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது யாழ் குடாநாடு எங்கும் மின்சாரத்தை நிறுத்தியது, வல்லைவெளியில் பஸ் ஒன்றை தீக்கிரையாக்கியது என பல சம்பவங்கள் அவருடன் கூட இருந்த இளைஞர்கள் மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்ல துக்ளக் சோ கரவெட்டி வந்து கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது அவருடன் பகிரங்கமாக கேள்விகேட்டு விவாதம் செய்தவர்
1979களில் வாசுதேவநாணயக்காரவை கரவெட்டிக்கு அழைத்து வந்து கருத்தரங்கு நடத்தியவர்.
தனது திரைப்பட அலுவல்கள் காரணமாக 2006ல் லண்டன் வந்தவர். அவர் விரும்பியிருந்தால் அப்போது லண்டனில் அகதி அந்தஸ்து கோரியிருக்க முடியும். ஆனால் அவரோ அதற்கு விரும்பாமல் மீண்டும் கொழும்பு திரும்பிச் சென்றார்
தோழர் தேவதாசனுக்கு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன தலைவர் பதவியை கொடுத்தவர்கள் ஜே.வி.பி யினர். அதுமட்டுமல்ல புதிய ஜனநாயக்கட்சி மற்றும் சிறீதுங்காவின் சோசலிசக் கட்சிகளின் சார்பாக வடபகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் தோழர் தேவதாசன்.
இந்தளவு பிரபல்யம் மிக்க ஒருவருக்கே இன்று இந்த கதி என்றால் பிரபல்யம் அற்ற அப்பாவிகளின் கதி என்ன?
உடனடியாக தோழர் தேவதாசன் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment