Saturday, September 26, 2020

தோழர்!

•தோழர்! நான் “தோழர்” என்று அழைப்பதற்குரிய தகுதியை இழந்து வெகு காலமாகிவிட்டது என்று இலங்கையில் இருக்கும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை ஒரு சாதாரண பெண் கூறியிருந்தால் நான் பொருட்படுத்தியிருக்கமாட்டேன். ஆனால் அவர் நான் பெரிதும் மதிக்கும் தோழர் செந்தில்வேல் அவர்களின் புரட்சிகர கட்சியில் தான் உறுப்பினராக இருப்பதாக கூறுகிறார். எனவே அவரிடம் நான் “ எப்போதிருந்து நான் தகுதியை இழந்தேன். ஏன் இழந்தேன்? “ என்று கேட்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர்கூட இன்பொக்சில் என்னை தோழர் என்று அழைத்து நன்றி கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. மாறாக நான் அம்பிகா அன்ரியை அவதூறு செய்துவிட்டேன் என்று குற்றம் சுமத்தினார். “சரி. அப்படியா? அம்பிகா அன்ரியை நான் செய்த அவதூறு என்ன?”என்று கேட்டேன் அதற்கு அவர் “அம்பிகாவை அன்ரி என்று எழுதுவது அவதூறு. ஆண்களை மாமா என்று அழைப்பது எப்படி கேவலமோ அதேபோன்று பெண்களை அன்ரி எழுதுவதும் அவதூறு” என்றார். அப்படியென்றால் நேருவை மாமா என்று சிறுவயதில் பாடசாலையில் சொல்லித்தந்தது அவரைக் கேவலப்படுத்தவா? என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக ஐபிசி மீது அம்பிகா அன்ரி வழக்கு போட்டு மிரட்டக்கூடாது என்று நான் எழுதியது தவறு என்கிறார். இதே ஐபிசி என்மீதும் அவதூறு செய்தது. அப்போது நான் வழக்குபோடவில்லை. மாறாக அவர்கள் தவறை சுட்டிக் காட்டினேன். அதேபோல் அம்பிகா அன்ரியும் வழக்குபோடாமல் விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கோரினேன். ஏனெனில் சுமந்திரனும் தன்மீதான விமர்சனங்களுக்கு வழக்கு போடுவதாக மிரட்டுகிறார். என்னைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் வழக்கு போடுவதை ஆதரிப்பது என்பது காலப்போக்கில் கருத்துச் சுதந்திரத்திற்கே பாதகமாய் முடியும் என்பதே. இன்னொருவர் என்னை பெண்கள் மீது எப்போதும் வெறுப்பு கொண்ட மார்க்சிச கபடதாரி என்று எழுதியுள்ளார். இவரை நான் லண்டனில் சந்தித்தபோது மார்க்சி;ன் வரலாற்று ஆங்கில நூல் ஒன்றை படித்தக்கொண்டிருந்தார். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். உடனே அவர் “எனக்கு மார்க்சை ரொம்ப பிடிக்கும்”என்றார். “அப்படியா? மார்க்சின் எந்த கருத்து உங்களுக்கு பிடிக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ மார்க்ஸ் குடித்த பியர் பிராண்ட்; எனக்கும் பிடிக்கும்” என்றார். சத்தியமாக சொல்கிறேன். அதற்கு பிறகு இதுவரை நான் அவருடன் மார்க்சிசம் குறித்து பேசியதே கிடையாது. ஸ்டாலின் கொலைகாரன், மாவோ கொலைகாரன் என்றெல்லாம் சதா பேசிக் கொண்டிருக்கும் இவர் என்னை மார்க்சிச கபடதாரி என்று கூறுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மூப்பனார் வீட்டு திருமணத்தில் 600 ரூபாய்க்கு டான்ஸ் ஆடிய ஜெயா அம்மையாருக்கு 45ஆயிரம் கோடி சொத்து எப்படி வந்தது? என்று நான் எழுதியது தவறு என்றும் இது ஆணாதிக்க சிந்தனை என்றும் கூறுகின்றார். சரி. இந்த உண்மையை ஆணாதிக்க சிந்தனை இல்லாமல் எப்படி எழுதுவுது என்று கேட்டேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் அம்பிகா அன்ரி, ஜெயா அம்மையார் மீது காட்டும் அக்கறையை அவர்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பெண்கள் மீது காட்டுவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்டவர் எமது நட்பு சக்தியாக இருந்தால் பூனை தன் குட்டியைக் கவ்வுவதுபோல் அவர்மீதான விமர்சனம் இருக்கும். அதுவே எதிரியாகவோ அல்லது துரோகியாகவோ இருந்தால் புலி தன் இரையைக் கவ்வுவது போல் இருக்கும். அவ்வளவுதான். நான் “தோழர்” என்று போட்டுக்கொள்வதற்கு யார் யாரிடமெல்லாம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது? குறிப்பு - நாம் நோயுடன்தான் போராட வேண்டும். மாறாக நோயாளிகளுடன் அல்ல. எனவேதான் சம்பந்தப்பட்ட பெண் பெயரை தவிர்த்துள்ளேன்.

No comments:

Post a Comment