Saturday, September 26, 2020

தற்கொலை செய்வது கோழைத்தனம்

“தற்கொலை செய்வது கோழைத்தனம். கடைசிவரை எதிர்த்து நின்று முயற்சி செய்ய வேண்டும்” என சிறுவயது முதல் எமக்கு போதிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புலிகள் இயக்கம் தற்கொலை தாக்குதல் செய்தபோது அதனை இலங்கை அரசு முதல் ஜ.நா வரை அனைவரும் கண்டித்தனர். ஆனால் இன்று வருடத்திற்கு சுமார் 3000 பேர் இலங்கையில் தற்கொலை செய்கின்றனர். இது குறித்து இலங்கை அரசும் கவலைப்படவில்லை. ஜ.நா வும் அக்கறை கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இலங்கையில் 2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில்கூட இந்தளவு தற்கொலைகள் நடக்கவில்லை. இன்று இது அதிகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் மாறாக மக்கள் தற்கொலை செய்வதுதான் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருந்த யாழ் மாவட்டம் இன்று அதிகளவு சாராயம் விற்ற மாவட்டமாக விளங்குகின்றது. கேரளாவில் இருந்து கஞ்சா போதைவஸ்து மூட்டை மூட்டையாக தினமும் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்குகிறது. புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை மடக்கி பிடித்த இலங்கை இந்திய அரசுகளால் போதைவஸ்து கடத்தும் வள்ளங்களை பிடிக்க முடியவில்லையாம். உண்மையில் அரசியல்வாதிகள் தங்களது சலுகைகள்மீது அக்கறை கொள்கினறனரேயொழிய மக்கள் நலன் மீது அக்கறை கொள்வதில்லை. இதில் இலங்கை ஆட்சியாளர் மீது முழு குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. எமது தமிழ் தலைவர்களுக்கும் பங்கு , பொறுப்பு இருக்கிறது. எமது தமிழ் தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனம் கேட்கும் அக்கறையில் ஒருசத வீதத்தைக்கூட மக்கள் நலனுக்காக கேட்பதில் காட்டுவதில்லை. குறிப்பு- இன்று 10.09.2020 தற்கொலை செய்து கொள்வதினை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினமாகும். கிளிநொச்சியில் இரு காதலர்கள் கூட்டாக தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

No comments:

Post a Comment