Saturday, September 26, 2020

மகிந்த ராஜபக்சா - மல்லி (தம்பி) கோத்தா!

மகிந்த ராஜபக்சா - மல்லி (தம்பி) கோத்தா! நான் சொல்வதை கொஞ்சம் கவனமாய் கேள். இது 2009 அல்ல. துப்பாக்கி காட்டி தமிழனை மிரட்ட முடியாது. பேசாமல் விட்டிருந்தால் ஒரு 40 பேர் அஞ்சலி செலுத்திவிட்டு போய் இருப்பாங்கள். இப்ப பார், நீ தடை என்றவுடன் அவங்கள் அதை உடை என்கிறான். இது தேவையா? நீ யாழ்ப்பாணத்தில் தடை போட்டாய். அவனுகள் என்னடாவென்றால் உலகம் பூரா கொண்டாடுகிறான்கள். பிரிந்து நின்ற கட்சிக்காரன் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அஞ்சலி செலுத்த ஆரம்பிச்சிட்டாங்கள். ஆயுதம் ஏந்திய போராளிகளை வன்முறையாளாகள்; என்று பேசிய சுமந்திரனே கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக பேச வைத்துவிட்டாய். மௌனமாக இருந்த சம்பந்தர் ஐயா “சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்” என்று கூற வைத்து விட்டாய். இப்படியே போச்சுன்னா மாகாணசபைத் தேர்தலில் ஒரு சீட்கூட நமக்கு கிடைக்காமல் போய்விடும் போல இருக்கே. நம்ம சிங்கள கவிஞன் ஒருவன் “உன் சமாதியில் முழந்தாளிட்டு வணங்குவேன்” என்று திலீபனுக்கு கவிதை எழுதுகிறான். அதை இன்னொரு சிங்கள பாடகன் பாடி வெளியிடுகிறான். அதுமட்டுமல்ல திலீபன் நினைவு தினத்தை தடை செய்தால் தான் சிங்கள புலியாக மாறுவேன் என்று சிஙகள மாணவி ஒருத்தி பகிரங்கமாக கூறுகிறாள். இதைவிட நம்ம அமைச்சர் வாசுதேவ நாணயக்கார “திலீபன் ஒரு உன்னதமான தியாகி” என்று புகழ் பாடுகிறார். ஜேவிபி தலைவர் அனுரா கூட திலீபனை நினைவு கூர்வதை தடை செய்வது தவறு என்கிறார். இப்படி நம்ம சிங்கள இனத்தவர்களே அவங்களுக்கு ஆதரவாய் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேல் இந்த இனவாத விளையாட்டு மூலம் சிங்களவர்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என நினைக்காதே. தமிழ்நாட்டில திலீபன் நகர், திலீபன் தெரு, திலீபன் பஸ் நிலையம் என பெயர் வைத்து நினைவு கூர்கிறாங்கள். இந்திய அரசே பேசாமல் கண்டுக்காமல் இருக்கும்போது நீ ஏன் தேவையில்லாமல் தடை போடுகிறாய்? நமக்கு வோட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யப்பார். இல்லைன்னா நீ அடுத்தமுறை ஜனாதிபதியாக முடியாது. நீ மட்டுமல்ல என் மகன் நாமல் ராஜபக்சாகூட ஜனாதிபதியாக முடியாமல் போய்விடும்.

No comments:

Post a Comment