Saturday, September 26, 2020

மக்களிடம் செல்வது பயன் அற்றதா?

•மக்களிடம் செல்வது பயன் அற்றதா? கனடாவில் நடந்து போவதால் அல்லது ஜெனீவாவுக்கு சயிக்கிளில் செல்வதால் என்ன பயன் என்று சிலர் கேட்கின்றனர். உண்மைதான். தீர்வு வந்துவிடப் போவதில்லைதான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது. வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ 2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் அதரவு உதவியாக இருந்ததோ அதேபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய நீதியைப்பெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம். அதைத்தான் கனடா, லண்டன், ஜெனீவா வில் எல்லாம் எமது மக்கள் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். கனடாவில் நடை பயணம், லண்டனில் பிரதமர் மாளிகை முன்; ஆர்ப்பாட்டம,; ஜெனீவாவில் கவனயீர்ப்பு பேரணி என உலகெங்கும் மக்களை சந்திக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அதனால்தான் இலங்கை அரசு அச்சம் கொள்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அது முயற்சி செய்கிறது. தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டம் தானாக மங்கிவிடும் என இலங்கை ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் தமிழர்கள் தாமாகவே இந்தளவு விரைவாக திருப்பி எழும்புவார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. தமிழர்கள் திருப்பி எழும்புவது ஆச்சரியம் இல்லை. அவர்கள் எழும்பாவிட்டால்தான் ஆச்சரியம். ஏனெனில் அவர்கள்; நீண்டதொரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் அல்லவா! குறிப்பு - கீழே உள்ள படம் கனடாவில் 450 கீலோ மீற்றர் தூரத்தை 13 நாட்களாக நடக்கும் உணர்வாளர்களின் படமாகும். அவர்களுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment