Wednesday, September 30, 2020

மகன் - அப்பா! நித்திரை வரமாட்டேங்குது

மகன் - அப்பா! நித்திரை வரமாட்டேங்குது. ஏதாவது கதைச்சிட்டு இருக்கலாம் வாங்கோ. சிறீதரன் - சரிடா. என்ன கதைக்கப்போற? மகன் - இல்லை. நாம் எப்போதும் மொத்தம் 4பேர்தான் வீட்டில இருக்கப்போறோமா? நீங்கள், அம்மா, அண்ணா, நான் ,,,, சிறீதரன் - உனக்கு கல்யாணம் ஆனா நாங்கள் 5 பேர் ஆகிடுவோம்ல? மகன் - அப்ப அண்ணா கல்யாணம் பண்ணி போய்விடுவான் அல்லவா. அப்பவும் நாங்க 4 பேர்தானே ? சிறீதரன் - சரிடா. உனக்கு குழந்தை பிறக்கும் அல்லவா. அப்ப நாங்கள் 5 பேர் ஆகிடுவம்தானே? மகன் - அதெப்படி அப்பா, அப்ப நீங்கள் செத்திடுவீர்கள் அல்லவா? சிறீதரன் - உருப்படாதவனே போய் ஒழுங்கா தூங்கடா. இது ஒரு பகிடி உரையாடல்தான். ஆனால் இனி சீரியஸான ஒரு விடயத்தை பற்றி எழுதப் போகிறேன். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இறுதிக் கூட்டம் ஒன்று நல்லூரில் நடைபெற்றது. அதில் சிறீதரன் பேசும்போது “ நான் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொடுக்கவிவில்லை என்று சிலர் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் யாழ்ப்பாணத்தான் வயலுக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவே குடி நீர் கொடுப்பதை நான் தடுத்தேன்” என கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த யாழ்ப்பாணத்தான் சுமந்திரன் என்றும் அவர் கூறியிருந்தார். என்ன இதுவும் 75 கள்ள வோட்டு போட்ட கதைபோல் இருக்கிறதே என்று எண்ணி சுமந்திரனின் சொத்து விபரத்தை சரி பார்த்தபோது அவரும் தனக்கு கண்டாவளையில் 40 எக்கர் வயல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே சிறீதரன் கூறியிருப்பது உண்மைதான். அதுமட்டுமல்ல அவர் இதைக் கூறும்போது சுமந்திரனும் மேடையில் இருந்தார். அவரும் இதை மறுக்கவில்லை. சுமந்திரன் வயலுக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கவில்லை என்று சிறீதரன் கூறுவது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சரி. இதற்கு தீர்வு என்ன? இது குறித்து பலர் பலவித மாற்று வழிகளை கூறுகின்றார்கள். ஆனால் மலிவானதாகவும் சிறந்த தீர்வாகவும் நான் கருதுவது மதவாச்சிவரை வந்துள்ள மாவலி நீரை இரணைமடுக் குளத்திற்கும் கட்டுக்கரை குளத்திற்கும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு கொண்டுவந்தால் வன்னி மக்களின் மூன்றுபோக விவசாயத்திற்கும் போதிய நீர் கிடைக்கும். அதுமட்டுமன்றி யாழ் குடாநாட்டு மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு உலக வங்கியிடமிருந்து பணம் பெற பெறமுடியும். அதுமட்டுமல்ல வீட்டுத்திட்டத்திற்கு தரும் பணத்தை இதற்கு தரும்படி இந்தியாவிடமும் கோர முடியும். அரசியல்வாதிகள் மனம் வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த தடையும் இந்த திட்டத்திற்கு இல்லை. குறிப்பு - இந்த பதிவு சிறீதரனுக்கு எதிரானது அல்ல. யாழ் குடா நாட்டு மக்களுக்கு குடிநீர் வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment