Monday, October 30, 2017

• அருளினியன் எழுதிய “ கேரள டயரீஸ்”

• அருளினியன் எழுதிய “ கேரள டயரீஸ்”
1984ம் ஆண்டு ஒருநாள் சென்னையில் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் ஒரு போராளி நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு இளைஞருக்கு பலர் அடித்துக்கொண்டிருந்தனர். பஸ்சில் வந்தவர்கள் இறங்கி வந்து அடித்தார்கள்.
இதைப் பார்த்த எனது நண்பரும் ஓடிச் சென்று அடித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்பி வந்த என் நண்பரிடம் “ நீ ஏன் அடித்தாய்? அந்த இளைஞனை உனக்கு தெரியுமா?”என்று கேட்டேன்.
அதற்கு அவர் “எல்லோரும் அடித்தார்கள். அதுதான் நானும் ஓடிப் போய் அடித்தேன். மற்றும்படி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
இதை தமிழ்நாட்டில் “தர்ம அடி” என்பார்கள். அண்மையில் கேரள டயரீஸ் நூலுக்கு விழுந்த அடியைப் பார்த்தபோது எனக்கு இந்த சம்பவமே ஞாபகத்திற்கு வந்தது.
இந்தப் பத்தகத்தை படித்துக் கருத்து சொன்னவர்களைவிட படிக்காமல் கருத்து சொன்னவர்களே அதிகம்.
இந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்த முயல்வதாக சிலர் சினம் கொள்கிறார்கள்.
தமிழர்களை அரக்கர்கள் என்று கூறும் இராமாயணம் நூல் மீது சினம் கொள்ளாதவர்கள், தமிழர்களை பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்று கூறும் வேதங்கள் மீது சினம் கொள்ளாதவர்கள் கேரள டயரீஸ் மீது சினம் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழர்களின் போராட்டத்தை மழுங்கடிக்க முனையும் நூல் இது என்று வேறு சிலர் கோபம் கொள்கிறார்கள்.
ஒரு புத்தகம் மழுங்கடிக்கும் அளவிற்கு தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் பலவீனமானதாக இருப்பதாக நான் கருதவில்லை.
ஒரு கேரள டயரீஸ் மட்டுமல்ல ஓராயிரம் கேரள டயரீஸ் வந்தாலும் தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ட உணர்வை ஒருபோதும் மழுங்கடித்துவிட முடியாது.
ஆயிரம் பூக்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார் தோழர் மாஓசேதுங்.
எனவே எமக்கு சாதகமோ, பாதகமோ எதுவாயினும் நிறைய கருத்துகள் வரட்டும். வந்து முட்டி மோதட்டும்.
கேரள டயரீஸ் என்பது ஒரு இந்துமத நம்பிக்கையுள்ள ஒருவரின் கேரள கோயில்களுக்கான பயணக்கட்டுரைகளே.
வேர் தேடுவோம் என்று புறப்பட்டவர் நடிகர் திலீப்புக்குள் தேடிய மாதிரி அடுத்து நடிகை ஷகீலாவுக்குள்ளும் தேடப்போகிறாரோ என பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் அவர் தேடவில்லை.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இப்படி பல கேரள டயரீஸ்கள் இனிவருங்காலத்தில் நிறைய வரும். வரட்டும். வரட்டும்.
எதையும் எதிர் கொள்வோம்!

No comments:

Post a Comment