Sunday, October 1, 2017

N.மாலதி அவர்களின் கருத்துக்கள்.

 
ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
•“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் பற்றி N.மாலதி அவர்களின் கருத்துக்கள்.
மாலதி அவர்கள் தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அவர்பெரதெனியா பல்கலைக்கழகத்தில் Electrical Engineer பட்டம் பெற்றார். பின்னர் நியூசிலாந்து கன்ரபரி பல்கலைக்கழகத்தில் Ph.D. in computer science பட்டம் பெற்றார்.
அவர் 2005 முதல் 2009 வரை நான்கு வருடங்கள் ஈழத்தில் வன்னியில் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவங்களினூடாக A Fleeting Moment in My Country என்னும் நூலை எழுதியுள்ளார்.
மனிதவுரிமை செயற்பாட்டாளரான N.மாலதி அவர்கள் தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து எழுதிய கட்டுரை EPW என்னும் ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
எனது “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள N.மாலதி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூல் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
தோழர் பாலனின் 'ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்ற நூல் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.
மிகவும் தேவையான ஒரு பதிவு. தமிழரிடம் தமது வரலாற்றை பதியும் கலாசாரம் மிகவும் குறைவு.
அதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் இருப்பதால் இதன் தேவை எமக்கு மிக அதிகமாகவே உண்டு.
இடதுசாரி தமிழர் அரசியலின் ஒரு வரலாற்றுப் பதிவாக பாலனின் இந்நூல் விளங்குகிறது.
தென் தமிழீழத்தில் இயங்கிய தமிழர் பாதுகாப்பு பேரவை பற்றி எவ்வளவு ஈழத்தழிழருக்குத் தெரியும்.
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் மேலோங்கி இருந்த காலத்தில் பாலன் பதிவுசெய்திருக்கும் பல போராட்ட நிகழ்வுகளும் போராளிகளும் பெரும்பான்மையோரால் மறக்கப்பட்டு இருந்தன.
இதனாலும் பாலனின் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
பாலனின் நூலின் நாயகனாக விளங்கும் தமிழரசன் போன்ற சிறந்த போராட்ட தலைவர்களின் சமூக புரட்சியை நோக்கிய விடுதலைப்பாதையில் வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒன்றாக சேர்ந்து முன்னேற வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.
மக்களின் எழுச்சியும் சமூகப்புரட்சியும் ஒன்று சேரும் போது விடுதலைக்கான பாதை திறக்கும் என்பதையே தமிழரசன் போன்ற போராளிகள் தம் வாழ்க்கையினூடாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள்

No comments:

Post a Comment