Monday, October 30, 2017

தோழர் பவணந்தி அவர்கள் “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
•காஞ்சிபுரத்தில் இருக்கும் தோழர் பவணந்தி அவர்கள் “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்னர் அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களில் பவணந்தியும் ஒருவர்.
தமிழ்நாடு விடுதலைப்படையினால் நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு மற்றும் கிண்டி நேரு சிலை தகர்ப்பு வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் பவணந்தி அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் பவணந்தி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
“தோழர் தமிழரசனின் மறைவுக்கு பின்னர் அவர் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தது. அதில் எனது பங்களிப்பு என்ன என்பதையும் அவ் அனுபவங்கனையும் கூறவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவற்றை இன்னொரு நூலில் நிச்சயம் எழுதுவேன் என்று கூறிக்கொண்டு இந்நூலை முடிக்கின்றேன்”. இந் நூலின் இறுதி வரிகள் இவை.
இந்த இறுதி வரிகளின் பிறகுதான் தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டத்தில் எனது பங்களிப்பு இருக்கிறது. அந்த வகையில் தோழர் பாலன் மின் அஞ்சலில் அனுப்பிய ‘‘ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’‘ என்ற நூலின் மீதான எனது பார்வை.
1980 களில் தமிழீழ விடுதலைப் போரும் , தமிழக விடுதலைப் போரும் ஏறக்குறைய சம காலத்தில் ஆயுதப்போராட்டவடிவமாக வளர்ந்தது.இந்த இரு நாட்டு போராட்டங்களின் அனுபவங்களை, வரலாறாக மிக இயல்பாக கூறிச்செல்வது, பாலன் அவர்களின் மிகச்சிறந்த எழுத்தாளுமையைக் காட்டுகிறது.
தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்கள் நடத்திய இரண்டு மாநாடுகள் மிக முக்கியமானவை.
1.1984 இல் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் நடந்த இரண்டுநாள் மாநாடு.
2.1985 இல் அரிலூர் மாவட்டம் மீன் சுருட்டியில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கு.
பெண்ணாடம் மாநாடு அறிக்கையில்
1.இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழீழ விடுதலையை ஆதரிப்பது எனவும்,
2.உலக தேசிய இனங்களின் விடுதலைப்ப்போராட்டம் மற்றும் இந்தியாவில் நடந்த விடுதலைப்ப்போராட்டம் ஆகியவற்றை ஆதரிப்பது மட்டுமின்றி தமிழக விடுதலைபோராட்டத்தை பாட்டாளிகள் தலைமையில் முன் எடுப்பது. எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
மீன் சுருட்டியில் நடந்த விவசாயிகள் கருத்தரங்க அறிக்கையில்
சாதி ஒழிப்பின் எதிரிகள் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ நிலபிரபுத்துவ சக்திகளே. சாதியைஒழிக்கக்கூடிய முன்னணி சக்திகள் தாழ்த்தப்பட்டவர்களே. அதிகாரத்தையும்,நிலத்தையும் கைப்பற்றாமல் தாழ்தப்பட்டவர்களால் சாதிகளை ஒழிக்க முடியாது. பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல், உழைக்கும் மக்களை அணிசேர்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களால் அதிகாரத்தை வெல்லவே முடியாது. என அறிவிக்கிறது.
இந்த இரு அறிக்கைகள் தமிழக விடுதலை வரலாற்றில் மார்க்சிய சிந்தனையை ஊட்டியது.
இந்நிலையில் இலங்கையின் புரட்சிகர அமைப்பான தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவையின் போராளிகளுடன் தோழர் தமிழரசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. தமிழ்மக்கள் பாதுகாப்புப்பேரவையினர் ஒட்டுமொத்த இலங்கைப்புரட்சியை முன்னெடுப்பவர்கள்.
இவர்களோ, இந்தியப்புரட்சி என்பதே தேசியஇனங்களின் விடுதலை மூலமே சாத்தியப்படும் என தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்தனர்.இந்த எதிர் நிலையிலும் இவ்விரு அமைப்புகளும் இணைந்து செயலாற்றியது மார்க்சிய, மாவோவிய சிந்தனைகள் அடிப்படையில்தான் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையினர் தோழர் தமிழரசன் மூலம் அரசியல் கல்வி பெற்றனர். அதேவேலை தோழர் தமிழரசனும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படைத் தோழர்களும் ஆயுதப்பயிற்சியை பேரவையினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்
.ஈழப்போராட்ட வரலாற்றில் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் கருவிகள் மூலமே தீர்க்கப்பட்டது. ஆனால் பேரவை அமைப்பானது ஒருபோதும் இன்னொரு அமைப்புப் போராளிகளை கொன்றதில்லை என்றும்,அமைப்புக்குள்ளே கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் கொன்றதில்லை. இந்த பெருமைக்கு தோழர் தமிழரசனின் வழிகாட்டுதலே என்று நூலாசிரியர் தெரிவித்திருப்பது, தோழர் தமிழரசனின் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
என்ற குறளின் வழி போலும்.
1983களில் இந்திய அரசு ஈழப்போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஆயுதங்களையும் கொடுத்தது.
தோழர் தமிழரசன் அவர்கள் இந்தியா ஒருபோதும் தமிழீழத்த்தை ஆதரிக்காது. பயிற்சி கொடுப்பதே இலங்கையை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காகவே என தெளிவுபடுத்தியதையும்,இதனால் போராளி அமைப்புகள் இந்திய அரசுக்கு பயந்து தோழர் தமிழரசனுடன்தொடர்பு கொள்வதையே தவிர்த்தாக தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய அரசு செய்தது தோழர் தமிழரசன் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பதை வருத்தத்துடன் தோழர் பாலன் விளக்கியுள்ளார்.
தோழர் தமிழரசன் தேவையான பணம் இருந்தும் கூட பல நேரங்களில் நடந்தேவருவார் என்றும் உணவுகூட உண்ணாமல் வருவார் என்ற வரிகளைப்படித்ததும் என் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.
புரட்சி என்பது மாலை நேரத்து விருந்தல்ல என தெரிந்தும்.
இன்றைய தமிழக சூழலில் பல்வேறு அமைப்புகள் தோழர் தமிழரசனின் படங்களைப் போட்டு அவரின் வழி நடப்போம், அவரது பாதையில் பயணிப்போம் என செயல்படுவது மகிழ்ச்சி என்றாலும், அந்த பாதையை நடைமுறைதான் தீர்மானிக்கும்.
இந்நிலையில் இந்நூல் வெளிவருவதென்பது பாதையை தேடுபவர்களுக்கு நல்ல துணையாக இருக்கும்.
இந்நூலை எழுதிய தோழர் பாலன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-பவா
திருவள்ளுவர் ஆண்டு 2048,கன்னி 24.
10.10.2017.

No comments:

Post a Comment