Sunday, October 1, 2017

தோழர் முகிலன் தமிழ்மணி அவர்களின் கருத்துக்கள்.

 
ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
“ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் முகிலன் தமிழ்மணி அவர்களின் கருத்துக்கள்.
தோழர் முகிலன் கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர். நீண்ட சிறைவாழ்வை அனுபவித்தவர்.
சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். துறையூர் சிறப்புமுகாமில் இருந்த புலிகள் இயக்க போராளி சிவாவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பிரசுரமாக அடித்து விநியோகித்தவர்.
அதுமட்டுமன்றி அவர் அச்சடித்த நூலை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எனக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.
தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்னர் அவர் பாதையை முன்னெடுத்த தோழர்களில் ஒருவர் இவர்.
இவர் எனது நூல் பற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு,
’ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’ என்ற தலைப்பிலான தோழர் பாலச்சந்திரன் அவர்களின் நூலை மின்படியாகப் படித்தேன்.
தோழர் அந்நூலை அனுப்பியதோடு எம் கருத்தையும் கேட்டிருந்தார். இந்நூலைப் பற்றிய கருத்து கூற வேண்டியது என் கடமை என்பதை நான் அறிவேன்.
தமிழகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்ற தோழர் தமிழரசன் அவர்களைப் பற்றி அவரின் அணுக்கத் தோழர்களாக இருந்த ஈழப்போராளிகளின் கருத்தை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது எம் போன்றோரின் கடமையன்றோ?
பொதுவாக ஈழப் போராளிகள் அனைவரும் அவர்கள் எந்த அமைப்பினராக இருந்த போதிலும் ஒரு செய்தியில் உடன்பாடு கொண்டவர்களாக இருப்பதை நாம் அறிவோம்.
தமிழீழம் விடுதலை பெற வேண்டும் என்று விழையும் அவர்கள் அவர்களுக்குத் துணையாக இந்திய அரசின் துணையையே நாடினரேயன்றி இந்திய அரசுக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலை இயங்கங்களின் துணையை நாடியதில்லை.
அதிலும் தமிழக விடுதலை என்ற சொல்லே ஈழ விடுதலைக்கு எதிரானது என்ற முடிவில் இருப்பர்.
இந்தியப் படையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த சூழலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமிழக விடுதலைக் கருத்தியலுக்கு மாறாக இருந்ததை நாம் அறிவோம்.
இந்தியப் படை ஈழமண்ணில் கொடுமை புரிந்து வந்த சூழலில் சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவோடு உரையாடும் வாய்ப்பு பெற்ற நான் இந்திய அரசு தமிழீழ விடுதலைக்கும் தமிழக விடுதலைக்கும் எதிரான ஆற்றல் என்று பல்வேறு சான்றுகளோடு விளக்கிய போதும் இந்தியத் துணையின்றி ஈழம் அமைய வாய்ப்பில்லை என்றும் இந்திய அரசே தமக்கு உற்ற தோழமை என்றும் டக்ளஸ் கூறினார்.
ஆனால் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரிலான தமிழீழப் போராட்ட இயக்கம் தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களின் ஒருங்கிணைப்பை விழைந்த போதிலும், இந்திய கொடுநெறி அரசின் தமிழின ஒடுக்கலை உணர்ந்திருந்த காரணத்தால் தமிழ்நாட்டு விடுதலையின் தேவையை ஆதரித்து நின்றது.
தோழர் தமிழரசன் தலைமையில் கருவி தாங்கிய மக்கள் போராட்ட வடிவத்திற்கு மாற்றமுற்ற தமிழக விடுதலைப் போருக்கான அனைத்து உதவிகளையும் வழங்கியது. தமிழ்நாடு விடுதலைப் படையோடு தொடர்ந்து தோழமையோடு செயலாற்றியது.
மறுபுறத்தில் மார்க்சியத்தைப் பேரவையினர் புரிந்து கொள்ள மெய்யியல் உரையாடல்களையும் வகுப்புகளையும் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ.)இயக்கத் தலைமை நடத்தியது. ஈழப்பறவைகள் தங்குவதற்கு உரிய கூடுகளை அமைத்து உதவியது.
இந்த வரலாறுகள் இந்நூலில் மிகச் சரியாகவே பதியப் பட்டுள்ளன.
தோழர் தமிழரசனை முன்னிறுத்தி தெற்காசிய வரலாறே இந்நூலில் பேசப்படுகின்றது. இந்திய வல்லரசின் விரிவாதிக்க மனநிலையைச் சான்றுகளுடன் தோழர் பாலன் விளக்கியுள்ளார்.
தமிழீழத்தின் மீதான இந்தியப் படைத் தாக்குதல்கள் இந்தியப் பொருளாதார நலன்களின் பின்புலத்திலேயே நடத்தப்பட்டுள்ளன என்பதை தோழர் பாலன் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தியா வளைத்துப் போட்டுள்ள பல்வேறு தேசங்களிலிருந்து இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதைப் போன்றே அண்டை நாடான இலங்கையின் வளங்களையும் கொள்ளையிடுவதை அம்பலப் படுத்துகிறார் தோழர் பாலன்.
அதனால்தான் ஒருகட்டத்தில் தமிழீழ மக்கள் மட்டுமல்லாமல் சிங்கள மக்களும் இந்தியப் படையைத் திரும்பச் சொல்லிப் போராடினர்.
தோழர் தமிழரசனின் வீரமும் அறிவும் தொண்டுணர்வும் தோழமையும் என பல்வேறு சிறப்புக் கூறுகள் இந்நூலில் பலபட பாராட்டப்பட்டுள்ளன.
அதிலும் காவல்துறையின் நடவடிக்கைக்கு அஞ்சி காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்ட மாற்றியக்கத்தினரின்பால் சினங்கொள்ளாது அச்செயலுக்கான காரணத்தை உணர்ந்து நகைத்த தலைவர் தமிழரசனிடம் பேரவையினர் படித்த பாடம் மிகப் பெரியது.
ஆயுத முனையில் மாற்றியக்கத்தோடு கருத்து முரண்களைக் களையெடுத்ததில்லை என்பது தோழர் தமிழரசன் பேரவைக்கு தம் செயல் மூலம் விளக்கிய பாடம் என பாலன் கூறுகிறார்.
சொந்த இயக்கத்தினரையே கருத்து மாறுபாடுகளுக்காகத் தீர்த்துக் கட்டும் வழமையுடைய ஈழக் குழுக்களிலேயே அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாத பெருமை பெற்றது பேரவை என்பதையும் அப்பெருமிதத்திற்குக் காரணம் தோழர் தமிழரசனின் நடைமுறையே என்பதை தோழர் பாலன் குறிப்பிடுகையில் முந்திரிக் காட்டுப் படுகொலைகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
தோழர் நெப்போலியன், தினேசு, சாந்தன் ஆகியோரை நான் பார்த்ததில்லை எனினும் அவர்களின் தோளோடு தோள் நின்று மலையாளப் பட்டி, சிறுமலை முகாம்களில் இருந்தது போன்ற உணர்வை தோழர் பாலன் ஊட்டியுள்ளார்.
சிறைக்குச் சென்று திரும்பிய போராளிகள் பலரும் (நான் உட்பட) கட்சிப் பணியைக் கைவிட்டு, படைக்கருவியைத் தூக்கிப் போட்டுவிட்டு கருத்துப் பரப்புரை என்று முன்னணிப் பணிக்கு மாறிவரும் சூழலில் ஒன்பதாண்டுகள் சிறையிருப்புக்குப் பிறகு விடுதலையான தோழர் தமிழரசன் அவர்கள் மீண்டும் தலைமறைவு வாழ்க்கையை நாடியதும், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ.)வைக் கட்டியதும், தமிழ்நாடு விடுதலைப்படை நடத்தியதும் சரியாக விளக்கப்பட்டுள்ள இந்நூல் வெளிவருவது இன்றியமையாததாகிறது.
தமிழரசனின் பாதையில் செயல்படுவோம் என்று சூளுரைப்போர் கவனிக்க வேண்டிய பகுதி இது.
புலவர், தமிழரசன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் அவர்களின் அடிதொடர்ந்து செல்ல வாய்ப்பு பெற்றோம் என்ற மகிழ்வும் அவர்களின் பாதையில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் என்ற மகிழ்ச்சியும் நிறைந்துள்ள உள்ளத்தோடு இந்நூலையும் நூலாசிரியர் அன்புத் தோழர் பாலன் அவர்களையும் வாழ்த்துகிறேன்.
தோழமையுடன்
தமிழ். முகிலன்
தமிழர் கழகம்

No comments:

Post a Comment