Sunday, October 1, 2017

•சுவிஸ்குமார் தண்டிக்கப்பட்டுள்ளார் -

•சுவிஸ்குமார் தண்டிக்கப்பட்டுள்ளார் -ஆனால்
சுவிஸ் குமார்களை உருவாக்குபவர்கள் தண்டிக்கப்படவில்லை!
சுவிஸ்குமாரை உருவாக்கியவர்கள் கண்டறியப்படவில்லை. அவர்கள் தண்டிக்கப்படவில்லை.
எனவே அவர்கள் இன்னொரு சுவிஸ் குமாரை உருவாக்குவார்கள். விரைவில் இன்னொரு வித்யா அவர்களுக்கு பலியாகுவார்.
சுவிஸ்குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உதவிய அமைச்சர் விஜயகலாவுக்கு மென்மையான கண்டனம் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் குமாருக்கு உதவியமைக்காக அமைச்சர் விஜயகலாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அவர் ஏன் உதவினார் என்பதை விசாரணை செய்யவில்லை.
சுவிஸ் குமாருக்காக வீதியில் இரண்டு மணி நேரம் காவல் இருந்து அமைச்சர் விஜயகலா உதவியதாக குறிப்பிடும் நீதிமன்றம் அவர் ஏன் அவ்வாறு ரொம்பவும் அக்கறை எடுத்து உதவினார் என்பது குறித்து விசாரணை செய்யவில்லை.
முக்கியமாக ஒரு சட்டப் போராசிரியர் சட்டத்திற்கு புறம்பாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று குற்றவாளி சுவிஸ் குமாருக்கு உதவியுள்ளார்.
அந்த சட்டப் போராசிரியர் தமிழ்மாறனின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் அவருக்கு கண்டனம்கூட தெரிவிக்க முன்வரவில்லை.
ஒரு சட்டப் பேராசிரியர் எதற்காக குற்றவாளி சுவிஸ் குமாருக்கு சட்டவிரோதமாக உதவ முனைந்தார் என்பது பற்றிக்கூட விசாரணை செய்யப்படவில்லை.
குற்றவாளி சுவிஸ்குமாருக்கு உதவியதாக கைதுசெய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தன் வாக்குமூலத்தில் அமைச்சர் விஜயகலா மற்றும் தமிழ்மாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டதாலேயே உதவினேன் என்று தெரிவித்த பின்னரும்கூட இன்னும் அவர்கள் விசாரணை செய்யப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச “ அமைச்சர் விஜயகலா பதவியில் இருந்து விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட பின்னரும்கூட அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது நீதிமன்றமே அமைச்சர் விஜயகலாவை கண்டித்துள்ள நிலையிலும் அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக முன்வரவில்லை.
இலங்கையில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் அமைச்சர் விஜயகலாவும் சட்டப் பேராசிரியர் தமிழ்மாறனும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையே இவை யாவும் காட்டுகின்றன.
சுவிஸ்குமாருக்கு தண்டனை அளித்தது மூலம் இனி வித்யாக்களை கொலை செய்வோர் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்று அர்த்தம் இல்லை.
மாறாக வித்யாக்களை கொலை செய்வோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வேண்டுமாயின் அவர்கள் அமைச்சர்களாகவும் சட்டப் பேராசிரியர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையே காட்டியுள்ளது.
ஆம். நீதிமன்றத்தின் வலைக்குள் சிறு மீன்களே அகப்படுகின்றன. பெரிய திமிலங்கள் அகப்படுவதில்லை.
இந்த உண்மை புரியாமல் வித்யா வழக்கில் நீதி நிலைநாட்டுப்பட்டுவிட்டதாக அப்பாவிகள் புளங்காகிதம் அடைகிறார்கள்.
குறிப்பு-
ஒருமுறை ஒரு கைதிக்கு தூக்கு தண்டணை நிறைவேற்றும்போது “உனது கடைசி ஆசை என்ன?வென்று கேட்கப்பட்டதாம். அதற்கு அவன் “விரைவில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடியுங்கள்” என்றானாம். இது ஒரு ஜோக்தான் என்றாலும் இன்றைய உண்மை நிலையும் அப்படித்தான் இருக்கிறது. மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு சுவிஸ்குமார் “ உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடியுங்கள்” என்று கூறிய வரிகளும் முற்றாக புறந்தள்ளிவிட முடியாதவை.

No comments:

Post a Comment