•இசைப்பிரியா குடும்பம் இந்திய அரசுக்கு துணை போகிறதா?
ஒரு குழந்தை எரிகாயங்களுடன் நிர்வாணமாக ஓடிவரும் புகைப்படமே வியட்நாம் போரில் அமெரிக்காவை அம்பலப்படுத்தியது.
இந்த குழந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார். அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.
ஏனெனில் இந்த படமே உலகின் மனச்சாட்சியை உலுக்கியது. வியட்நாமுக்கு உலக ஆதரவை பெற்றுக் கொடுத்தது.
அதேபோல் இலங்கை அரசை அம்பலப்படுத்தியதில் இசைப்பிரியாவின் புகைப்படம் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆனால் துரதிருஸ்டவசமாக இசைப்பிரியாவின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என அவரது குடும்பத்தினர் வற்புறுத்துவதாக தெரிகிறது.
ஏ.சி.குருநாத் என்பவர் தயாரிப்பில் தமிழ் இன உணர்வாளர் கணேசன் இயக்கத்தில் இசைப்பிரியாவின் கதையை “போர்க்களத்தில் ஒரு பூ” என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது.
இத் திரைப்படம் வெளிவருவதை விரும்பாத இந்திய அரசு தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்தது.
படத்தின் இயக்குனர் கணேசன் தணிக்கைக்குழுவின் இந்த முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சினி மற்றும் சகோதரி தர்மினி ஆகியோர் இப் படம் வெளிவருவதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அவர்கள் தமது மனுவில் “ இசைப்பிரியாவின் வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். நாங்கள் வெளிநாட்டில் அகதியாக வாழ்கிறோம். இப் படம் வெளிவந்தால் எங்களுக்கு சிக்கல் வரும் “ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இசைப்பிரியாவின் குடும்பத்தினர் படத்தை பார்வையிடாமலே தடை செய்யும்படி கோரியிருப்பது அவர்கள் இந்திய அரசின் விருப்பத்திற்கு துணை போகின்றனரோ என்ற சந்தேகத்தை தருகிறது.
மேலும் “படத்தை பார்வையிட்டு எந்த காட்சிகளை நீக்கச் சொல்கிறீர்களோ அதை நீக்க தயாராக இருக்கிறேன்” என இயக்குனர் கூறிய நிலையிலும் இசைப்பிரியா குடும்பத்தினர் படத்தை பார்வையிடாமல் தடை கோருவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
அதுமட்டுன்றி படம் வெளிவருவதால் வெளிநாட்டடில் வசிக்கும் இசைப்பிரியா குடும்பத்தினருக்கும் என்ன சிக்கல் வந்தவிடும் என்பதும் சரியான காரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
இசைப்பிரியா தமிழ் மக்களுக்காக போராடியவர். போரின் இறுதியில் சரணடைந்த அவரை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளது.
இதனால் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இசைப்பிரியாவை தமது குடும்பத்து பிள்ளையாகவே கருதுகின்றனர். அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே இசைப்பிரியா குடும்பத்தினர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை பிரசுரிக்க வேண்டாம் என்றோ அல்லது அவரது திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை கோருவதோ தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்கின்றது.
வேண்டுமானால் அவர்கள் திரைப்படத்தை பார்வையிட்டு தமது கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம். அதைவிடுத்து தடை கோருவது தவறாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துக்கள் எமக்கு சார்பாக இல்லாவிழடினும் அதை தடுக்க கூடாது. தோழர் மாசே துங் கூறியது போல் “ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்”.
எமது தமிழின விடுதலைக்கான கருத்துகள் நியாயமானவை. அவை ஒரு திரைப் படத்தை எதிர் கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமானவை அல்ல.
இசைப்பிரியா குடும்பத்தினர் தமது தடை கோரும் மனுவை வாபஸ் பெற வேண்டும்.
No comments:
Post a Comment