Tuesday, January 31, 2017

•இதுதான் கந்தன் கருணையா?

•இதுதான் கந்தன் கருணையா?
கந்தன் தமிழர் கடவுள் என்றார்கள். அதனால்தான் தமிழர் இருக்குமிடமெல்லாம் கந்தன் கோயில்கள் இருக்குது என்கிறார்கள்.
கந்தன் ஒரு மாம்பழத்திற்காக தன் தாய் தந்தையரான சிவன் பார்வதியை எதிர்த்து கலகம் செய்தவர் என்கிறார்கள்.
அதுமட்டுமன்றி தேவர்களைக் காப்பதற்காக சூரனை வதம் செய்தவர் என்று கந்தபுராணம் கூறுகிறது என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சுட்ட பழம் கொடுத்து விளையாட்டுக்; காட்டியவர் என்றும் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட கடவுள் கந்தன் குடியிருப்பதாக கூறும் நல்லூர் கந்தன் கோவிலில் தமிழ் மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாண மக்கள் நல்லூர் கோவில் அருகில் ஆதரவு குரல் எழுப்ப முயன்றபோதே கோவில் நிர்வாகம் இவ்வாறு தடை விதித்துள்ளது.
சிங்கள ராணுவம் சப்பாத்து கால்களுடன் வந்தபோது மௌனமாக இருந்த கோவில் நிர்வாகம் இப்போது தமிழ் மக்களை செருப்புடன் வெளி வீதியில்(ரோட்டில்) வர வேண்டாம் என அறிவித்துள்ளது.
சிங்கள ராணுவம் குண்டு போட்டபோது மௌனமாக இருந்த கோவில் நிர்வாகம் தமிழ் மக்கள் அமைதியாக கூடுவதை தடை செய்கிறது.
கடவுள் கந்தன் இப்போது இருந்தால் என்ன செய்திருப்பார்?
இந்த தமிழ் மக்களின் போராட்டத்தில் தன் வேலாயுதத்துடன் கலந்து கொண்டிருப்பாரா?
அல்லது தன் கோவில் வாசலில் குந்தியிருந்து போராட வேண்டாம் என தடை போட்டிருப்பாரா?
கந்தன் கருணை மிக்கவர் என்கிறார்கள். ஆனால் அந்த கந்தன் கோவிலில் தமிழ் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் முதலில் தமது கடவுள் கந்தனைக் காக்க போராட வேண்டியவர்களாக இன்று இருக்கின்றார்கள்.
ஒருசிலரின் கையில் சிக்கியுள்ள நல்லூர் கந்தன் கோவிலை வடமாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இன்று கோயில் வருமானம் முழுவதும் ஒரு சில குடும்பங்களுக்கே செல்கிறது. அதனை மக்களுக்கே செலவு செய்ய வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment