•எத்தனை இடர்கள் வந்தாலும்
தமிழ் இனம் தன் உணர்வினை இழந்து விடுவதில்லை.
தமிழ் இனம் தன் உணர்வினை இழந்து விடுவதில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஒன்று, காணாமல்போன உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பிரதமர் இல்லம் முன் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு.
இன்னொன்று, ஈஸ்ட்காம் நகரில் நடைபெற்ற தியாகி முத்துக்குமார் நினைவு நிகழ்வு.
வவுனியாவில் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. இருப்பினும்கூட அவர்களுக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்த பிரிஎவ் அமைப்பினை பாராட்ட வேண்டும்.
கடும் குளிர். அதைவிட கொட்டும் மழை வேறு. இருந்தும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்.
அனைத்து நாடுகளிலும் இருக்கும் தமிழ் மக்களால் நடத்தப்பட வேண்டிய நிகழ்வு இது.
யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்படவில்லை.
இவ்வாறு பல நாடுகளிலும் நடத்தப்படும் நிகழ்வுகள் நிச்சயம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அடுத்து, முத்துக்குமார் நினைவு நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசால் நடத்தப்பட்டது. ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்த முத்துக்குமாரின் ஈகம் நினைவு கூரப்பட்டமை உண்மையிலே பாராட்டப்பட வேண்டியதாகும்.
ஆனால் நடந்து முடிந்த இரண்டு நிகழ்விலும் மிக குறைவான மக்களே கலந்து கொண்டது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ஒருவாரத்திற்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் அடுத்தடுத்து 3 இடங்களில் மக்கள் கூடினார்கள்.
எந்தவொரு அமைப்பு ஏற்பாடும் இன்றி குறுகிய கால இடைவெளியில் வெறும் முகநூல் மூலம் அறிவித்து இந்த ஒன்று கூடல்களை நடத்தியிருந்தனர். இதில் பல தமிழ் மக்கள் ஆர்வமுடன் பங்குபற்றியிருந்தனர்.
இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமக்கான போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்க தயாராகவே இருக்கிறார்கள்.
எனவே பல பிரிவுகளாக பிரிந்து, வெறும் அடையாள நிகழ்வுகளாக இல்லாமல் அனைத்து தமிழ் மக்களையும் பங்கு பற்ற வைப்பதற்கு நிகழ்வு எற்பாட்டாளர்கள் முனைய வேண்டும்.
இல்லையேல் இப்போது வரும் சொற்பமானவர்களும்கூட இனிவரும் காலங்களில் பங்கு பற்றாமல் போய்விடக்கூடிய நிலையே தோன்றும்.
No comments:
Post a Comment