Tuesday, January 31, 2017

•புலம்பெயர் தமிழர்களுக்கு ஜே.வி.பி அழைப்பு!

•புலம்பெயர் தமிழர்களுக்கு ஜே.வி.பி அழைப்பு!
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் இன்று (27.01.2017) மாலை 6 மணியளவில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உடனான சந்திப்பு உரையாடல் நடைபெற்றது.
இலங்கையில் அனைத்து மக்களுக்குமான உரிமைக்காக போராட முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு விஜித ஹேரத் அழைப்பு விடுத்தார்.
அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் இவ் கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. லண்டன் ஜே.வி.பி கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.
ஜே.வி.பி யின் லண்டன் பொறுப்பாளர் தமன்னே தமது உரையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இவ்வாறான கலந்துரையாடல்களை செய்வதற்கு ஜே.வி.பி விரும்புகிறது என்றும் இதன் மூலம் மக்களிடையே ஒரு ஜக்கியத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது உரையில் அரசியல் அமைப்பு திருத்தம் பற்றியும் அதில் ஜே.வி.பி யின் நிலைப்பாடு பற்றியும் விளக்கினார். பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சந்துரு தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பை செய்தார்.
விஜித ஹேரத்தின் உரையில் இருந்து,
•ஜே.வி.பி இனவாதக் கட்சி என்பது தவறு. அது இருதடவை ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தும் ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமது ஆயுதத்தை பயன்படுத்தியதில்லை
•ஜே.வி.பி அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை வலியுறுத்துகின்றது. அது எந்தவொரு இனத்திற்கும் அல்லது மதத்திற்கும் விசேட முன்னுரிமை வழங்குவதை எதிர்க்கின்றது.
•13 வது திருத்தச்சட்டம் இனப் பிரச்னைக்கு தீர்வு அல்ல என்று ஜே.வி.பி கருதுகிறது. சாதாரண மக்களுக்கு உரிமைகள் சென்றடைய வேண்டும் என ஜே.வி.பி விரும்புகிறது.
•அம்பாந்தோட்டையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதுபோல் சம்பூரில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜே.வி.பி குரல் கொடுக்கிறது.
•வடபகுதி மீனவர் பிரச்சனைக்கு ஜே.வி.பி உண்மையாகவே குரல் கொடுக்கிறது. அதேபோல் காணாமல் போனோர் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை பிரச்சனை, மீள்குடியேற்ற பிரச்சனை என்பனவற்றுக்காகவும் ஜே.வி.பி குரல் கொடுத்து வருகிறது.
•தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமை இல்லையேல் எந்த வெற்றியையும் பெற முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்பதை ஜே.வி.பி நன்கு உணர்ந்துள்ளது. எனவே ஒன்றுபட்டு போராட வருமாறு தமிழ் மக்களை ஜே.வி.பி அழைக்கிறது.
அவதானிப்பு-
இனவாதம் மதவாதம் போன்ற அனைத்து பிற்போக்குவாதத்தையும் முறியடிப்தற்கு இடதுசாரிகளின் ஒற்றுமையும் பலமும் அவசியம். அதனைக் கட்டுவதற்காக ஜே.வி.பி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது விளக்கப்படவில்லை.
மேலும் தோழர் சண்முகதாசன் கூறுகிறார் “ தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு பிரிந்து போகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அதனை பிரயோகிக் வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோர முடியும்.”
தமிழ் சிங்கள மக்களின் ஜக்கியத்தை உண்மையில் ஜே.வி.பி விரும்பினால் அது தோழர் சண்முகதாசனின் இக் கருத்தை பரிசீலனை எடுத்துக் கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment