Sunday, January 22, 2017

•அதிசயம். ஆனால் உண்மை. தமிழகம் தலை நிமிர்கிறது!

•அதிசயம். ஆனால் உண்மை.
தமிழகம் தலை நிமிர்கிறது!
கூட்டம் கூடுவார்கள். கோசம் போடுவார்கள். அப்புறம் கலைந்து போய்விடுவார்கள் என்று நினைத்தார்கள்.
ஜல்லிக்கட்டுதானே. மிஞ்சிப் போனால் ஒரு நாலு மாவட்டத்தில சத்தம் போடுவார்கள் என்று நினைத்தார்கள்.
“இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அரசால் ஒன்றும் செய்ய இயலாது” என்றால் அதை நம்பி பேசாமல் இருந்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள்.
தடியடி ,மின்சாரம் நிறுத்தம், கல்லூரிகளுக்கு விடுமுறை என்று போராட்டத்தை பிசு பிசுக்க செய்துவிட முடியும் என்று நினைத்தார்கள்.
ஆனால் அத்தனையையும் தாண்டி ஆயிரக் கணக்கில் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். நான்கு நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த பெரிய அரசியல் கட்சியும் போராட்டத்திற்கு அழைப்பு விடவில்லை. எந்தபெரிய ஊடகமும் போராட்ட செய்திகளை ஒளிபரப்பவில்லை.
ஆனாலும் மக்கள் சோர்வடையவில்லை. தினமும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
எப்படி இந்த அதிசயம் நடக்கிறது என்று புரியாமல் அரசு திகைத்து நிற்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு தனிநாடாகி விடுமோ என்று அது அச்சம் கொள்கிறது.
மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் மக்கள் திரண்டுள்ளார்கள். அங்கு ஒரு புறம் மக்கள் கோசம் போடுகிறார்கள். இன்னொருபுறம் மக்கள் குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர். இன்னொரு புறம் மக்களுக்கு உணவுகளை விநியோகிக்கின்றனர்.
இவையாவும் மக்கள் தாங்களாகவே ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றனர். எந்திவித தலைமையும் இன்றி நேர்த்தியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
போராட்டத்தில் இளம் பெண்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் இதவரையில் ஒரு பெண்ணின் மீது யாரும் சேட்டை விட்டதாக ஒரு குற்றச்சாட்டு வரவில்லை.
அத்தனை கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்ட போராட்டமாக நடந்துகொண்டிருப்பது தமிழர்களை பொறுக்கி என்று கூறிய சுப்பிரமணிய சுவாமிக்கு அதியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்தான்.
இனியும் தான் அடிமையாக இருக்கமுடியாது என்பதையும் யாரும் தன்மீது சவாரி செய்ய அனுமதிக்க இயலாது என்பதையும் தமிழகம் உலகிற்கு காட்டத் தொடங்கியுள்ளது.
இது உண்மைதான். தமிழகம் தலை நிமிர்கிறது. பெருமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment